12 மணி நேர வேலை மசோதா : சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு!

Published On:

| By Kavi

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த எப்ரல் 21ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று, தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தன. ஆனால் தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதனை செயல்படுத்தும், கட்டாயம் இல்லை என அமைச்சர்கள் சி.வி.கணேசன் மற்றும் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தனர்.

எனினும் இந்த சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி மற்றும் எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில், தொழிற்சங்கத்தினருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தச்சூழலில் 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு அனுப்புவதற்கு முன்னதாக சட்டப்பேரவையில் நிறைவேறிய மசோதாக்களைத் திரும்பப் பெறும் அதிகாரம் அரசுக்கு இருக்கிற நிலையில், தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுடன் சேர்த்து மொத்தம் 17 மசோதாக்கள் சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரியா

லிங்குசாமி சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

செட்டிநாடு குழுமத்தில் ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel