2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று இன்று(ஏப்ரல் 21) முடிந்தது. இன்றைய கூட்டத்தொடரின் போது, தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த சட்ட திருத்த மசோதா என்பது பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 நேரமாக உயர்த்துவது ஆகும். இந்த மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட போதே திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த சட்ட மசோதாபடி ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்ற அடிப்படையில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். நடைமுறையில் இருக்கும் 8 மணி நேரம் என்ற வேலை நேரம், ஒருநாளுக்கு கூடுதலாக 4 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்த சட்டமசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வரின் பதிலுரைக்கு முன்னதாகவே அதிமுக வெளிநடப்பு செய்தது.
திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. பாஜக, பாமகவும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஓ.பன்னீர் செல்வமும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை, “இந்த சட்டம் என்பது மத்திய அரசு கொண்டு வந்த சட்டமாகும். அம்பானி, ஆதானி போன்ற பெறு நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது. இதை நாம் கொண்டு வந்தால் மத்திய அரசை ஏற்றுக்கொண்டது போல் அர்த்தமாகிவிடும். இந்த சட்டத்தை கொண்டு வந்தால் முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நலன் வாரியத்தை சிதைப்பது போல் ஆகிவிடும். எனவே இதனை எதிர்க்கிறோம்” என்றார்.
விசிக எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், “ஒன்றிய அரசு ஏற்கனவே இருந்த தொழிலாளர்களின் 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக கொண்டு வந்திருக்கிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். எவ்வாறு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்ததோ, அதே எதிர்ப்பு இதற்கும் இருக்கிறது. இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்” என்றார்.
ஓ.பன்னீர் செல்வமும், பாஜக. எம்.எல்.ஏ, நயினார் நாகேந்திரனும் இந்த சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.
இப்படி கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் ஆளும் கட்சியான திமுகவும், கொங்குநாடு மக்கள் கட்சியும் ஆதரித்தன. பின்னர் ஒருமனதாக சட்ட மசோதா நிறைவேற்றக்கப்பட்டது.
அன்று எதிர்த்த ஸ்டாலின்
முன்னதாக, மத்திய அரசு தொழிலாளர்களின் 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக கொண்டு வந்த போது மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்திருந்தார்.
இதுதொடர்பாக 2020ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை.
“உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் அடையாளமாகத் திகழும் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றை பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறேன்.
உடல் உழைப்புத் தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் என்பதை ஏனோ துவக்கத்திலிருந்தே மத்தியில் உள்ள பாஜக அரசு ஏற்க மறுக்கிறது; இதில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளின் பக்கம் சாய்ந்திடும் நோக்கம் இருக்கிறது.
ஏழை தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம். அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம் என்ற ஆபத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், ஏதோ பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் போல், குளிர் பதனப்படுத்தப்பட்ட அறையில் அமர்ந்து பெற்றவை அல்ல. 1886ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பேரணி நடத்தி – ரத்தம் சிந்தி – உயிரைத் தியாகம் செய்து பெற்ற உரிமை.
முத்தமிழறிஞர் கலைஞர் 1986ல் கோவையில் நடைபெற்ற மே தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய போது தொழிலாளர்களின் நலனுக்காக அறிவித்த 6 முழக்கங்களில் ’இனி பணி நேரம் 6 மணிதான் எனக் கோரிக்கை வைப்போம்’ என்ற முத்தான முழக்கத்தை முன் வைத்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் முதலாளிகளுக்குத் தொடர்ந்து தாரைவார்த்து, தனியார்மயப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், 44க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை நான்காகக் குறைக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசுக்குத் துணை போகும் நோக்கில் – அக்கட்சி ஆளும் மாநில முதல்வர்களும், வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்பது, அபாயகரமான போக்கு மட்டுமல்ல தொழிலாளர்களுக்கு நிரந்தரமான ஆபத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.
பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அப்படியே காப்பி அடித்துவரும் அதிமுக அரசு தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். மத்திய பாஜக அரசு தனது கார்ப்பரேட் மனப்பான்மையை கழற்றி வைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இப்படி கண்டனமும், எச்சரிக்கையும் தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில், 12 மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருப்பது அரசியல் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது.
அமைச்சர்கள் விளக்கம்
12 மணி நேர வேலை சட்டம் குறித்து தலைமை செயலக வளாகத்தில் தொழிலாளர் நல துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், “தற்போது நடைமுறையில் உள்ள 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும், பணி நேரம், ஓய்வு, வரம்பு முறைகள், சம்பளம், மிகை நேரம், வாராந்திர விடுமுறை ஆகியவை நடைமுறைப்படி தொடர்ந்து நீடிக்கும்.
தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65ஏ பிரிவின் கீழ் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகளுடன், தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் விருப்பத்தின்படிதான் நடைமுறைப்படுத்தப்படும். இல்லை என்றால் அரசு நிச்சயமாக பரிசீலனை செய்து அதன்பிறகு நடைமுறைப்படுத்தும். 48 மணி நேரம் வேலை என்பதில் மாற்றம் இல்லை.
எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. அந்தந்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களின் விருப்பப்படிதான் நடைமுறைப்படுத்தப்படும். இது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்திருத்தம் அல்ல. தொழிலாளர்களின் விருப்பத்தை மீறியோ அல்லது கட்டாயப்படுத்தியோ இது நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது” என்றார்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “இப்போது கொண்டு வந்திருக்கிற 65ஏ சட்ட திருத்தம் என்பது பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வருகிறபோது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறபோது, தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
மேலும் அவர், “தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சொன்னதை போல, எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
உதாரணமாக, மின்னணுவியல் துறையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யக்கூடிய தொழில்கள், எலக்ட்ரானிக் கிளஸ்டர்ஸ் அல்லது மென்பொருள் துறையில் பணியாற்றக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் அங்கு வேலை பார்க்கக்கூடியவர்கள் விரும்பினால் இதை ஒரு ஆப்ஷனாக எடுத்துக்கொள்ளலாம்.
இன்றைக்கு மாறுபட்டிருக்கும் வொர்க்கிங் கண்டிஷனில் இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்று. எந்த தொழிற்சாலைகளுக்கு இது பொருந்தும் என்பதை முடிவு செய்யக்கூடிய கொள்கைகள் அரசால் வகுக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வாய்ப்பை தன்னார்வமாக யார் விரும்புகிறார்களோ அதை தேர்வு செய்யும் உரிமையை இந்த சட்டம் வழங்குறது.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை மாற்றுவதாக இது அமையாது. எந்த இடத்தில் வேலைபார்க்கிறார்கள், தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கக் கூடிய வொர்க்கிங் கண்டிசன் என்ன ஆகியவை குறித்து பார்க்கப்படும்.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும், எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவன தளத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. எனவே பணியாளர்கள் வேலை பார்க்கும் பணி தளத்திற்கு இடையே உள்ள தூரம் என்ன?.
12 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால், அதற்கேற்ற வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் முழுமையாக ஏற்றுக்கொண்டுதான் அனுமதி வழங்கப்படும்.
நிறுவனங்கள் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. இது தொழிலாளர்கள் விரோத போக்கு கிடையாது” என்று விளக்கமளித்தார்.
பிரியா
“சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக இருக்கும்”: முதல்வர் ஸ்டாலின்