“ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அதற்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆகஸ்ட் 13, 14) தொடர் விடுமுறை வந்ததால், சென்னையிலிருந்து மக்கள் தென் மாவட்டங்களுக்குப் பயணமாயினர்.
அப்போது அவர்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் பதிவு செய்தனர். அந்த டிக்கெட் விலை வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இதுதொடர்பாக அரசுக்கும் புகார் அளிக்கப்பட்டது.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி!
இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அன்றைய தினமே (ஆகஸ்ட் 12) ஆய்வுக் குழு அமைத்து அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் அந்தக் குழுவினரும் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தைத் திரும்ப வழங்கினர்.
இதற்கிடையே ஊருக்குச் சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்ப (ஆகஸ்ட் 15) ஆம்னி பேருந்தில் டிக்கெட் புக் செய்தனர்.
அப்போதும் ஆம்னி பேருந்தில் கட்டண கொள்ளை நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக நெல்லையிலிருந்து சென்னை வரை ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சம் 2,500 ரூபாயும், அதிகபட்சம் 4,500 ரூபாயும் வசூலிக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின.
இதைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 19) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்,
“ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தொடர் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன.
அப்படி ஆய்வு செய்யப்பட்டதில் 953 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டிருக்கிறது.
அதில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்ததையடுத்து, புகார் செய்த 97 பயணிகளுக்கு அவரிடமிருந்து கூடுதலாகப் பெற்ற கட்டணங்கள் திருப்பியளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 68,800 ரூபாய். இப்படி கட்டணத்தைவிட கூடுதலாய் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது 11 லட்சத்து 4 ரூபாய் அபராதத் தொகையும் வரியும் விதிக்கப்பட்டிருக்கிறது.
தொடர் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். கூடுதல் கட்டண புகார் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கூடுதல் கட்டண வசூல் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அமைச்சர் எச்சரிக்கைக்குப் பின்னும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்!