நீட் தேர்வில் 104 மார்க் : அண்ணாமலை சொன்னால் சீட் கிடைக்குமா?

அரசியல்

பெற்ற குழந்தைகளை மருத்துவர்களாக்கிவிட வேண்டும் என்பது பெற்றோர்களின் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று. இதற்காக வாழ்நாள் முழுக்க உழைத்து சேமித்த பணத்தை வாரி இறைக்கவும் பலர் தயங்குவதில்லை.

2016-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்று வந்த மருத்துவ சேர்க்கை 2017-ம் ஆண்டு முதல் நீட் நுழைவு தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தெருவுக்கு தெரு நீட் பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன.

தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க 80 லட்சம் தொடங்கி 1 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால் பயிற்சி மையங்களில் குழந்தைகளைச் சேர்த்து அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடிக்க பெற்றோர் போட்டிபோட்டு வருகின்றனர்.

இதனால், எப்படியாவது மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்கிற கனவுடன் பல ஆயிரங்களைக் கட்டணங்களாக கொட்டி பயிற்சி மையங்களில் காத்துக்கிடக்கின்றனர் ஆயிரக்கணக்கான மாணவர்கள்.

நீட் நுழைவு தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, சமமற்றது, ஏழை மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கிறது என ஆளும் திமுக முதல் அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால், தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா ஆளுநரின் மேஜையை கடந்து தற்போது குடியரசு தலைவரின் பார்வைக்காக காத்துக்கிடக்கிறது.

இந்த நிலையில் தான் 2022ம் கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கனவுடன் இந்த தேர்வை எதிர்கொண்டனர்.

இவர்களில் வெறும் 51.30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு மூலம் ஓபிசி மற்றும் பட்டியலின மாணவர்கள் மருத்துவ சீட் பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் 93 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், நீட் தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவி அகிலாண்டேஸ்வரி இலவச மருத்துவ சீட் பெறுவதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையைச் சந்தித்தது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

104 Marks in NEET Exam

மாணவி அகிலாண்டேஸ்வரியை செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்திய அண்ணாமலை, டீ மாஸ்டரின் மகளான அந்த மாணவி அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அவரை வாழ்த்துவதாகவும் கூறி இனிப்பை ஊட்டினார்.

தொடர்ந்து அந்த மாணவி அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்னர் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அப்போது, அந்த மாணவியின் மருத்துவ படிப்புக்கான செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும் என அண்ணாமலை அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாணவி, நீட் தேர்வில் தான் 104 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் அண்ணாமலையை சந்தித்தால் இலவச மருத்துவ சீட் கிடைக்கும் என கேள்விப்பட்டதால் அவரை சந்திக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் மாணவியை அண்ணாமலையின் கால்களில் விழுமாறு பா.ஜ.க. பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி கண்களால் சைகை காட்டிய வீடியோ காட்சிகள் ஒருபக்கம் வைரலாக, மற்றொரு பக்கம் 104 மதிப்பெண் பெற்றவருக்கு இலவச மருத்துவ சீட் எப்படி கிடைக்கும் என அண்ணாமலையை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

104 மார்க் எடுத்த பெண்ணுக்கு இலவசமாக மருத்துவ சீட் கிடைக்கும் என பா.ஜ.க. பொய் பிரச்சாரம் செய்து வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க 720-க்கு 550 மதிப்பெண்களாவது பெற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், 104 மதிப்பெண்களுக்கு தனியார் கல்லூரிகளில் மட்டுமே இடம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

மேலும், அங்கு ஆண்டுக்கு 16 முதல் 20 லட்சம் ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் மருத்துவ படிப்பை முடிக்க 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை செலவாகக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேல், புத்தகங்கள், விடுதி செலவு எல்லாம் இருப்பதாகவும் போதாக்குறைக்கு 40 சதவீதம் வருமான வரி வேறு கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் ராஃபிக்

நீட் தேர்வு: உத்தரப் பிரதேசம் முதலிடம் – தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!

+1
0
+1
2
+1
1
+1
3
+1
4
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published.