மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

அரசியல்

’குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று நிதியமைச்சர் பிடிஆர் இன்று (மார்ச் 20) பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன் திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘குடும்பத் தலைவிகளான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி பெண்கள் மத்தியில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலைப்பாட்டை உண்டாக்கியது.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிய நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக நிதியமைச்சரிடம் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம்… ‘நாங்கள் இந்த தேதியில் இருந்து வழங்குகிறோம் என்று சொன்னோமா? கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அறிவிக்கப்படும்’ என்றெல்லாம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்தார்.

கடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள், ‘மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஸ்டாலின் சொன்னது என்னாச்சு?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறோம்.

பள்ளிகளில் காலை உணவு போன்ற கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறோம். இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம்’ என்று உறுதியளித்தார்.

இதற்கிடையே மின்னம்பலத்துக்கு சிறப்புப் பேட்டியளித்த தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவரும் பொருளாதார அறிஞருமான ஜெ.ஜெயரஞ்சன், பெண்களுக்கான மாத உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பற்றிய கேள்விக்கு,

“வருமான வரி கட்டுபவர்களுக்கு கிடையாது. வருமான வரி கட்டுபவர்களுக்கும், அரசாங்கத்திடம் சம்பளம் வாங்குபவர்களுக்கும் எதற்கு? இதுமாதிரியான கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கும்” என்று பதிலளித்தார்.

இந்த பின்னணியில் இன்று (மார்ச் 20) பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். (முதல்வர் உள்ளிட்ட அனைவரும் மேசையைத் தட்டுகிறார்கள்)

ஒன்றிய அரசால் பெரும் அளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெரும் உதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டில் திராவிட இயக்க மாதமான செப்டம்பர் மாதத்தில் திராவிட இயக்க தலைமகன் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல்வரால் துவங்கப்பட இருக்கிறது.

இத்திட்டத்துக்கான தகுதிகள் விரைவில் வெளியிடப்படும். இதற்காக ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.

வேந்தன்

பட்ஜெட்: புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை!

பட்ஜெட்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்!

1000 rupees per month for women
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *