”யார், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலைப் பெறவே ஆதார் இணைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
100 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரம் பெற்று வருபவர்கள் தங்கள் ஆதார் எண்ணை தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையதளம் மூலமாக இணைத்து வருகின்றனர்.
இப்படி, ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என வதந்தி பரவி வருகிறது.

இதுகுறித்து இன்று (நவம்பர் 18) சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “எல்லா இடங்களிலும் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.
100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.
திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும்.
ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி.
யார் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலைப் பெறவே ஆதார் இணைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றார்.
ஜெ.பிரகாஷ்