பருவமழை பெய்து வந்தாலும் கூட சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 100 சதவீதம் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின்சாரத்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவம்பர் 1) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மழை பெய்தாலும் கூட சீரான மின் வினியோகம் தருவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.
சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் மின்சாரத்துறையை சேர்ந்த 1440 பேர் பணியிலும், இரவு நேரங்களில் 600 பேர் பணியிலும் இருந்து சிறப்பாக வேலை செய்து வருகின்றனர்.
100 சதவீதம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. அதையும் உடனடியாக சரி செய்துவிட்டோம்.
வடகிழக்கு பருவமழையைப் பொறுத்த வரை முதலமைச்சரின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் 18,350 மின்மாற்றிகள் கையிலே இருப்பு இருக்கின்றன.
5000 கிலோ மீட்டர் அளவுக்கு மின்கடத்திகளும் உள்ளன. ஏற்கனவே ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் இருந்தன. இப்போது கூடுதலாக 50,000 மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. எனவே தமிழகத்தில் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 40,000 மின்கம்பங்கள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மழைக்கு முன்னதாகவே முதலமைச்சர் அனைத்துத்துறைகளுக்கும் அறிவுரை வழங்கியதன் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கலை.ரா
பேருந்துக்குள் கொட்டித் தீர்த்த மழை!
ரஜினிகாந்த்தை வரவேற்ற கர்நாடக அமைச்சர்!