100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என இன்று (மார்ச் 30 ) ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், “100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுக பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி பதில்!
நரிக்குறவர்களுக்கு மறுப்பு: ரோகிணி தியேட்டர் சொல்வது என்ன?