இரவோடு இரவாக சாம்சங் போராட்ட குழு நிர்வாகிகள் 10 பேர் கைது!

Published On:

| By christopher

10 Samsung protest executives arrested overnight!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களில் 10 பேரை நேற்று (அக்டோபர் 9)  இரவில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைத்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக சுங்குவார்சத்திரம் அருகே பெரிய பந்தல் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமர்ந்து போராடி வருகின்றனர்.

இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர்  பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.

காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் 21ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் அனைத்து தொழிற்சாலைகளின் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று போராட்டத்திற்காக டாடா ஏசி வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விபத்து ஏற்பட்டு வாகனம் கவிழ்ந்தது. இதில் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் வாகனத்தை அகற்ற போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது உதவி காவல் ஆய்வாளர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் பலரை அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து சாம்சங் தொழிற்சாலையின் சிஐடியு தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் எல்லன், துணைச் செயலாளர் பாலாஜி, துணைத் தலைவர்கள் ஆசிக், மோகன்ராஜ், மாதேஷ் உட்பட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

கைது செய்யுமளவிற்கு என்ன நடந்துவிட்டது?

தொடர்ந்து போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை அரசு நிலத்தில் அனுமதி இன்றி அமைத்திருந்ததாக கூறி வருவாய்துறையினர் இரவில் அகற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிபிம் தலைவர் கனகராஜ், ”சாம்சங் தொழிலாளர் சங்கத் தலைவர்களை இந்த இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்யுமளவிற்கு என்ன நடந்துவிட்டது?” என தமிழ்நாடு காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நயன் – விக்கி திருமண வீடியோ : விரைவில் வெளியீடு!

அருப்புக்கோட்டையில் திருட சென்றவர் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து இறந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share