பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமாபாரதி வரவேற்றுள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் அரசியல் சட்ட திருத்தத்தை உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 7 )அங்கீகரித்து தீர்ப்பளித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. அரசியல் சாசனத்தின் 103வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று (நவம்பர் 7 ) தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வில் வாசிக்கப்பட்டது. நீதிபதிகள் தனித்தனியாகத் தீர்ப்புகளை வாசித்தனர்.
அந்தத் தீர்ப்பில், “103 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும். இந்தச் சட்டத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை. பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது செல்லுபடியாகும். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களைத் தவிர்ப்பது அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகும். பாரபட்சமற்ற ஆட்சிக்கு சாதி, வர்க்க வேறுபாடின்றி எல்லா ஏழைகளும் சமமானவர்கள்” என்று கூறி மூன்று நீதிபதிகள் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்” என்று தெரிவித்தனர்.
இதை வரவேற்றுள்ள உமாபாரதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: “எல்லா ஏழைகளும் ஒரே சாதிதான், அது ‘ஏழை’ என்ற சாதி. இந்த இடஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும். உலகில் உள்ள அனைத்து ஏழை மக்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான சிறந்த வாழ்க்கைக்காக போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இந்த தீர்ப்பை வரவேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இது பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பெரிய பெருமை” என்று கூறியுள்ளார்.
முன்னதாக,பொருளாதாரத்தில் முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 103 வது திருத்தம் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த 2005-2006 காலகட்டங்களில் துவக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரசிகர்களைத் திருத்த முடியும், ஆளுநரை? கமல் பிறந்தநாள் மெசேஜ்!
லுங்கி அணிந்து லாரி ஓட்டியதால் அபராதம்: எதிர்த்து போராட்டம்!