பொருளாதாரத்தில் நலிவுற்ற முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என நவம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்க நவம்பர் 12-ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அதே நேரத்தில், திமுக சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்தை வெளியிட்டன.
இந்த விவகாரத்தில் திமுகவுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்துகொள்ளுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை அடுத்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை மின்னம்பலத்திடம் பேசியபோது, “அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளும். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து மற்றும் முரண் கருத்துக்கள் இருக்கும்.
தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளது. அதனை காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. இறுதி தீர்ப்பு வெளியாகும்போது காங்கிரஸ் கட்சி அதனை ஏற்றுக்கொள்ளும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், அனைத்து சமூகத்திலும் நலிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்றால் அதனை நாம் தான் சுய பரிசோதனை செய்ய வேண்டும். அதேநேரத்தில் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருக்கின்ற சமூகங்களை இது பாதிக்காமல் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் மாலியிடம் மின்னம்பலத்தின் சார்பில் தொடர்பு கொண்டு கேள்விகளை முன்வைத்த போது, “10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கட்டாயம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வோம். எங்களுடைய கட்சி நிலைப்பாட்டை அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்துரைப்போம்” என்று தெரிவித்தார்.
அப்துல் ராஃபிக்
அரட்டை அடிக்க ஒப்பந்தம்: திருமணத்தில் நடந்த ருசிகரம்!
மோர்பி விபத்து : அமைச்சருக்கு வாய்ப்பு மறுத்த பாஜக!