பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அடிப்படை அரசிலமைப்பு சட்டத்தை பாதிக்கும் என்று எம்.பியும் திமுக வழக்கறிஞருமான வில்சன் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்ற 5 நீதிபதி அமர்வில் 3 நீதிபதிகள் இன்று (நவம்பர் 7) தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தீர்ப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக வழக்கறிஞருமான வில்சன், “உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது மற்ற சாதியில் உள்ளவர்களுக்கான வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக இருக்கிறது.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தோம்.
இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது நாட்டில் உள்ள 33 சதவீத உயர் சாதியினருக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு கல்வி, வேலை உள்ளிட்டவற்றில் ஒதுக்கப்பட்டவர்களை முன்னுக்கு கொண்டு வரவே இட ஒதுக்கீடு என்பது கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்போது உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் இட ஒதுக்கீடு முறையே பாதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக அமைக்கப்பட்ட சினோ கமிஷன் அளித்த அறிக்கையின்படிதான் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால் சினோ கமிஷன் கூட இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று குறிப்பிடவில்லை. அதாவது எஸ்.சி, எஸ்.டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போக விடுப்பட்ட இடங்களை சமூக நலத்திட்டங்கள் மூலம் கொடுக்கலாம் என்றே பரிந்துரைத்து இருக்கிறது.
என்.எஸ்.எஸ். ஓ என்ற அமைப்பு 2004 ல் இந்தியா முழுவதும் 1.24 லட்சம் வீடுகளில் சாதி மற்றும் வேலை குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்தே சினோ கமிஷனும் அறிக்கை அளித்துள்ளது.
எனவே சினோ கமிஷன் அறிக்கையை மையமாக வைத்து 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தவறு என்று கூறினோம்.
சமூக இடஒதுக்கீட்டை பாதிக்கும் 10% பொருளாதார இடஒதுக்கீடு சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று ஒரு வாதத்தை தான் முன்வைத்தோம்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள், தினேஷ் மகேஸ்வரி, பேலா த்ரிவேதி, பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.
ஆனால் தலைமை நீதிபதியும், நீதிபதி ரவீந்திர பட்டும் இந்த சட்டம் செல்லாது என்று கூறியிருக்கின்றனர். இது சமத்துவத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பை மறுஆய்வு செய்வது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கலை.ரா
தொடரும் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்!
உயர்ந்து கொண்டே வரும் தங்கம் விலை!