10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று கடந்த நவம்பர் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
நவம்பர் 12ல் நடைபெறும் கூட்டத்துக்கு ஒரு கட்சி சார்பில் இரண்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தச்சூழலில் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
“பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து ஆராய 2016 ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்திய அரசு.
அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ் திமுக கூட்டணி மத்திய அரசுதான்.

திமுக சார்பில் அப்போது பதவியிலிருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.
இந்த சட்டத்தை தான் தற்போதைய பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.
காரியம் வேண்டுமென்றால் யார் காலையும் பிடிப்பதும் காரியம் முடிந்தவுடன் காலை வாருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைமை தற்போது பாஜக தேவை இல்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல் நடிக்கிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று (நவம்பர் 11) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஓபிசிக்கு சீட் வழங்க வகை செய்தது திமுகதான்.
அதை, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடி பெற்றுத் தந்தார். ஆக, குறை சொல்வதை விட்டுவிட்டு அதிமுக எங்களுக்குப் பின் நின்றால், தமிழகத்து மக்கள் கடந்த காலத்தில் அவர்கள் செய்த பாவங்களை எல்லாம் மன்னிப்பார்கள்.
ஆனால், இதிலும் அவர்கள் துரோகத்தைக் காட்டுவார்கள் என்றால், அதற்கு தமிழக மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.
’10 சதவிகித இடஒதுக்கீடு மூலம் பல பிரிவினர் பயனடைவார்கள்’ என வானதி சீனிவாசன்கூட தவறான தகவலைப் பரப்புகிறார்.
நான் அவருக்கு சவால் விடுகிறேன். இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டினால், எந்த சாதி அதிகம் பயனடைந்தது என்பதை, புள்ளிவிவரத்தோடு பாஜக வெளியிடத் தயாரா?
நாங்கள் தயார், எங்களிடம் இருக்கும், நாங்கள் பெற்ற புள்ளிவிவர ஆய்வுப்படி, பாஜக சொல்லும் எந்த சமுதாயத்தினரும் அதில் சேர்க்கப்படவில்லை.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும்தான் அதற்கான முழுப் பலன்களையும் அனுபவித்து வருகின்றனர் என சான்றுகள் உள்ளன.
ஆகவே, இதுகுறித்து முடிவெடுப்பதற்காகத்தான் நாளைய தினம் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, அரசாங்கம் முடிவெடுக்கும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்