10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 7) தீர்ப்பு வழங்கியது.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு, இன்று (நவம்பர் 8) இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழக செயலகத்தில் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் வரும் 12ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “10 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு சமூகநீதி கொள்கைக்கும் மாறானது என்பதால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்தாவது தளத்தில் உள்ள அரங்கில் சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களுக்கும் கடிதம் மூலம் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா