What happened to Minister Anita radhakrishnan

10 அடி தண்ணீர்… முதல் மாடியில் 3 நாட்கள்- அமைச்சர் அனிதாவுக்கு நடந்தது என்ன?

அரசியல்

What happened to Minister Anita radhakrishnan

டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தொடங்கிய பெருமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மீண்டு வருகிறது. ஆயினும் தூத்துக்குடி மாவட்டத்தின் உட்புறப் பகுதிகள் இன்னமும் வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடவில்லை.

இந்த நிலையில்தான் மக்களுக்கு உதவப் போன அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிவிட்டதாகவும் மூன்று நாட்கள் கழித்து டிசம்பர் 20 ஆம் தேதி அவரை தீயணைப்புத் துறையினர் மீட்டதாகவும் தகவல்கள் வந்தன. அனைத்துத் தொலைக்காட்சிகளும் இந்த செய்தியை வெளியிட்டன, மின்னம்பலத்திலும், அமைச்சருகே இந்த நிலையா என்ற உணர்வோடு அந்த செய்தியை வெளியிட்டோம்.

ஆனபோதும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை தேடினோம். அங்கே நெட்வொர்க் டவுன் என்பதால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

அந்த மூன்று நாட்களும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனோடு வெள்ளத்தில் சிக்கியிருந்த ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டேவிட் செல்வினிடம் நீண்ட முயற்சிக்குப் பின் அலைபேசியில் பேசினோம்.

டேவிட் செல்வின்

’செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கிட்டு பெறவு உங்ககிட்ட பேசறேன்’ என்றார். சொன்னபடியே சில மணித்துளிகளில் நம்மைத் தொடர்புகொண்டார்.

அமைச்சருடன் வெள்ளத்தில் நீங்களும் சிக்கிக் கொண்டீர்கள். அந்த 3 நாட்கள் என்ன நடந்தது? என்று டேவிட் செல்வினிடம் கேட்டோம். இதோ அமைச்சருடன் வெள்ளத்தை எதிர்கொண்ட அவரது  அனுபவம்…

”டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயித்துக் கெழமை சாயந்தரம் தூத்துக்குடியிலேர்ந்து சாத்தான்குளத்துக்கு போயிட்டிருக்கோம். மழை அப்பதான் ஆரம்பிச்சிது. அமைச்சர் அண்ணனோட நான்,   உமரி சங்கர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் செல்வகுமார் கார்ல போயிட்டிருக்கோம்.

சாத்தான்குளத்துக்குள்ள நாங்க போகும்போதே தண்ணி அதிகமாயிடுச்சு. அங்க குளம் உடைஞ்சு தண்ணி ஊருக்குள்ள வந்துக்கிட்டிருந்துச்சு. காலையில இருந்து மழை அதிகமா இருந்ததால ஒவ்வொரு ஏரியாவா போயி கரையெல்லாம் பலமா இருக்கானு பார்த்துக்கிட்டே இருந்தாரு. எங்கங்க கரை வீக்கா இருக்கோ அங்கெல்லாம் மணல் மூட்டைகளை அனுப்பி அடுக்கச் சொல்லிக்கிட்டே வந்தாரு.

சாத்தான்குளத்துல குளம் உடைஞ்ச பகுதிக்குள்ள ஒரு ஜேசிபியில ஏறி போனாரு. அங்க போயி மக்களுக்கு தேவையானதைக் கொடுத்துட்டு பாத்துட்டு வாராரு.

அப்புறம் திருப்பி கார்ல கெளம்பினோம். போற வழியிலயே தாமிரபரணில தண்ணி அளவு அதிகமாயிட்டே இருக்குனு தகவல் வந்துக்கிட்டே இருந்துச்சு. நாங்க போயிக்கிட்டே இருக்கோம், போற வழியில வெள்ளூர் குளம் கரைய உடைச்சிக்கிட்டு வெளிய வந்துடுச்சு. அந்த கரையை அடைக்க ஏற்பாடுகள பண்ணிட்டு அப்படியே போறோம். மழை கொட்டுது. ரோட்ல கார் வேகம் கொஞ்சம் கொஞ்சமா குறையுது.

ஸ்ரீவைகுண்டம் பக்கத்துல  கஸ்பா குளம் உடைச்சிக்கிடுச்சு. ஒவ்வொரு கிராமமும் தீவு மாதிரி ஆயிட்டிருக்கு. கரையோரம் இருக்குற மக்கள் எல்லாம் வெளியேறுங்கனு அனவுன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க.

அமைச்சரோட உத்தரவுல மணல் சாக்கு மூட்டைங்கள அங்கங்க அனுப்பிக்கிட்டே இருந்தோம். போயிக்கிட்டே இருக்கும்போது முக்காணியில தாமிரபரணி கரை உடைச்சிக்கிட்டு. அங்க கரையை பலப்படுத்த ஏற்பாடுகளை பண்ணிட்டு கார்ல ஏறி, உமரிக்காடு போறோம்.

உமரிக்காட்ல தாமிரபரணிக் கரையில நின்னு மணல் மூட்டைகளை அடுக்குற வேலைய பாத்துக்கிட்டிருந்தாங்க. அமைச்சர் அதை பார்வையிட்டுக்கிட்டிருந்தார். கரையை அடைச்சுக்கிட்டிருக்கும்போதே… தாமிரபரணி ஆத்துலேந்து தண்ணி பொங்கி உடைச்சுக்கிடுச்சு. எங்க கண் முன்னாடி கரை உடையுது. அங்க இருந்த எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுறாங்க.

அமைச்சரும் நாங்களும் கரையிலேர்ந்து ஓட்டம் பிடிச்சு ரோட்டுக்கு வந்துட்டோம். ரோட்ல கார்ல ஏறினோம். அப்ப ஊர் காரவுங்க தண்ணி வேகமாக ஊரை நோக்கி வருது, இனிமே நீங்க எங்கயும் போகாதீங்க. இருட்டிப் போச்சு. கரண்டும் இல்ல. அந்தப் பக்கம் ஊர்ல மேடான பகுதினு கை காட்டினாங்க.

சரினு ரோட்லேர்ந்து காரை எடுத்துக்கிட்டு உமரிக்காட்ல இருக்குற அந்த மேடான பகுதிக்குப் போனோம். தண்ணி ஏறிக்கிட்டே இருக்கு. அமைச்சரை பத்திரமா தங்க வைக்கணுமேனு எங்களுக்கு கவலை. அப்பதான் அந்தப் பக்கம் மாடி வீடு இருக்குனு சொன்னாங்க. அந்த வீட்டு ஓனர் அமெரிக்காவுல இருக்காரு. அவரோட தம்பிதான் பக்கத்துல இருக்காரு. அமைச்சர் வந்திருக்காருனு அவர்தான் சாவிய கொண்டாந்து கொடுத்தாரு.

சட்டுனு அந்த வீட்டுக்கு போயிட்டோம். கீழ இருக்காதீங்க தண்ணி ஏறிடும்னு முத மாடிக்கு போக சொன்னாங்க. அப்ப அமைச்சரோட காரை மேட்ல நிறுத்திட்டோம். விஐபி எஸ்கார்டு வண்டியும் வந்துச்சு. நல்ல வேளையோ அந்த எஸ்கார்டு வண்டிய அந்த வீட்டு போர்டிகோ மேல ஏத்திட்டோம். அந்த வண்டிதான் எங்களுக்கு ரெண்டு நாளா உதவப் போகுதுனு அப்ப எங்களுக்குத் தெரியாது.

ராத்திரி ஃபுல்லா சரியான மழை. அமைச்சர் போன்ல அதிகாரிகளுக்கும் கட்சி காரங்களுக்கும் பேசிக்கிட்டே இருக்காரு. தன்னோட தொகுதிக்குள்ளையும் மத்த ஏரியாக்கள்லையும் என்ன நிலவரம்னு விசாரிச்சு, அங்கங்க ஆட்களை அனுப்பிக்கிட்டே இருந்தாரு. ஒரு கட்டத்துல நெட்வொர்க் இல்ல… கொஞ்ச நேரமாச்சு போனும் ஆஃப் ஆயிருச்சு. பக்கத்து வீடுகள்ளேர்ந்து அமைச்சர் வந்திருக்காருனு ஊர்க்காரங்க வந்து பாத்தாங்க. அங்கயே காய்கறிகளை வச்சி கூட்டாஞ்சோறு மாதிரி ஆக்கி சாப்பிட்டோம்.

What happened to Minister Anita radhakrishnan

உமரிக்காட்ல ஒரு மேட்டுப் பகுதியில இருக்கிறதையும் இங்க தண்ணி அதிகமாயிட்டே இருக்குறதையும் அதிகாரிகள்கிட்டயும் கட்சிக்காரங்ககிட்டையும் அமைச்சர் சொல்லிட்டாரு. ‘தண்ணி வடிஞ்சதும் நானே வாரேன்’னும் சொல்லிட்டாரு.

பொழுது விடிஞ்சது. திங்க கிழமை. வெளிய எட்டிப் பாத்தா… ரோட்ல 10 அடிக்கு மேல தண்ணி. வீடு மேடுன்றதால போர்ட்டிகோ மேல ஏத்தி நிப்பாட்டிருந்த விஐபி எஸ்கார்டு வண்டிய சுத்தியும் கொஞ்சம் தண்ணி நின்னுச்சு. அதுல ஏறலாமானு அமைச்சர் கேட்டாரு. ஏற முடியும்னு சொன்னாங்க. உடனே கீழ இறங்கி எஸ்கார்டு வண்டியில ஏறி வாக்கி டாக்கி மைக்ல போலீஸுக்கும், அதிகாரிகளுக்கும் பேசினாரு., அந்த வாக்கி டாக்கிதான் ரெண்டு நாளா அமைச்சர் தொடர்ந்து மத்தவங்ககிட்ட பேசறதுக்கு உதவுச்சு.

ரெண்டு நாளாக அமைச்சரோட நாங்க எல்லாம் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல செவ்வாய் கிழமை மதியானம் தண்ணி கொஞ்சம் இறங்கிட்டிருந்தப்ப… இதுல நீச்சலடிச்சே ரோட்டுக்கு போயிடலாலேனு கேட்டாரு. அப்ப எல்லாரும் ஷாக் ஆயி, ‘அண்ணாச்சி. இது மேடு. இங்கயே இவ்ள தண்ணி நிக்கி. இன்னும் வெளிய போகப் போக பள்ளம். மாட்டிகிடாதீங்க’னு தடுத்து நிறுத்தினோம்.

அப்புறம் ஒரு வழியா புதன் கெழமை விடிஞ்சது. தண்ணி கொஞ்சம் கொஞ்சமா வடிஞ்சது. கார்ல போற அளவுக்கு தண்ணி இருந்த நிலையில அன்னிக்கு காலையில கெளம்பி அமைச்சரும் நாங்க எல்லாரும் அஞ்சு கிலோ மீட்டர் கடந்து பழைய காயல் வரைக்கும் வந்துட்டோம்.

What happened to Minister Anita radhakrishnan

அங்க எதிர்த்தாப்ல தீயணைப்புத் துறையும் மத்த அதிகாரிகளும் வந்தாங்க. அமைச்சரை பாத்ததும் சிரிச்சுக்கிட்டே பக்கத்துல வந்தாங்க. போட்டோ எடுத்துக்கிட்டாங்க. நாங்களும் அமைச்சரோட வந்துட்டோம்” என்று சொல்லி முடித்தார் டேவிட் செல்வின். நாம் குறுக்கிட்டு, ‘அமைச்சரை மீட்டாங்கனு செய்திகள் வந்துச்சே?’ என்று கேட்டோம்.

“அவங்க போட்டோ எடுத்தாங்க பாருங்க. அதுதான் அவங்க மீட்டது. அரசியல்வாதிகள் பொதுவா போட்டோ எடுத்து அரசியல் செய்யுறாங்கனு மக்கள் சொல்லுவாங்க. ஆனா வெள்ளத்துல பத்திரமா இருந்து அஞ்சு கிலோ மீட்டர் தாண்டி வந்த எங்க அமைச்சரையே மீட்டதா வந்த செய்திய பாத்து நாங்க எங்களுக்குள்ள சிரிச்சுக்கிட்டோம். அதெல்லாம் பாத்தா முடியுமா?

What happened to Minister Anita radhakrishnan

இதோ இப்ப பழையகாயல், கோவங்காடு, மஞ்சள் நீர் காயல், புல்லாவளி, ராமசந்திரபுரம், காமராஜ் நகர், ரட்சண்ய புரம்னு நிவாரணப் பணிகளுக்காக அமைச்சரோடதான் சுத்திக்கிட்டிருக்கோம்” என்று பெருமூச்சு விட்டு முடித்தார் டேவிட் செல்வின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

என்னை எள்ளி நகையாடிய கோமாளிகளே… இப்போது என்ன செய்கிறீர்கள்? ஸ்பெக்ட்ரம் ஏலம் ரத்து… ஆ.ராசா கேள்வி!

தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 3!

What happened to Minister Anita radhakrishnan

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *