வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருப்பது அநீதியானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக பாமக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 12) வெளிநடப்பு செய்தனர்.
டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் தமிழக அரசால் ஏற்படுத்தப்படும் காலதாமதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து கடந்த 31.03.2022-ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து 3 மாதங்களில் உரிய தரவுகளைத் திரட்டி, சட்டம் இயற்றி கடந்த கல்வி ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், 9 மாதங்கள் தாமதமாக கடந்த நவம்பர் 17 ஆம் நாள் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டது.
அதன்பின் இரு மாதங்கள் கடந்து 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாளில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான கூடுதல் ஆய்வு வரம்பை (Additional Terms of Reference )பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
அது வன்னியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த 3 மாதங்களுக்குள், அதாவது ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.
தமிழ்நாடு அரசாணையின்படி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை ஏப்ரல் 11-ஆம் நாளான நேற்றைக்குள் அரசிடம் ஆணையம் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
இது தொடர்பான நல்ல அறிவிப்பு தமிழக அரசிடமிருந்தும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்தும் வரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் தான், ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது.
இது பெரும் சமூக அநீதி. இந்த அறிவிப்பை தங்கள் தலையில் விழுந்த பேரிடியாக வன்னிய சமுதாய மக்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் வன்னியர்களுக்குத் தான் மிக நீண்ட, மிக அதிக போராட்ட வரலாறு உண்டு. ஆனால், அத்தகைய சூழலை ஏற்படுத்தி விடாமல், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக மே 31-ஆம் தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றி வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 12) சட்டமன்றத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக பேச முயன்ற பாமக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “ வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு ஒதுக்கீடு தாமதமாவது குறித்து பேச எங்களுக்கு பேரவையில் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
அவைத் தலைவர் இந்த பிரச்சினையை அனுமதித்திருக்க வேண்டும். அரசு பதில் சொல்லியிருக்க வேண்டும். அரசு பதில் சொல்வது என்பது இரண்டாம் பட்சம். ஆனால் அவைத் தலைவர் இந்த பிரச்சினையை அவையில் பேச அனுமதித்திருக்க வேண்டும்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக 21 உயிர் தியாகங்கள் செய்திருக்கிறோம்.
இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியது மருத்துவர் ராமதாஸும், பாமகவும்தான். பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் பற்றி இப்போது பேச விரும்பவில்லை.
10.5 இட ஒதுக்கீடு தாமதப்படுத்தப்படுகிறது. காலந்தாழ்த்தாமல் ஒரு மாதத்துக்குள் இதில் முடிவெடுக்க வேண்டும். கடந்த கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். இந்த கல்வியாண்டிலாவது எங்களது மாணவர்கள் பயன்பெற வேண்டும்” என்றார் ஜி.கே.மணி.
–வேந்தன்
“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!
யு.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை- சிக்கிய திமுக கவுன்சிலர்: ஸ்டாலின் ஆவேசம்!