10.5% இட ஒதுக்கீடு கோரி மாநிலம் தழுவிய போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு!

அரசியல்

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கவிட்டால் பாமக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில்,

“மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் உள்ள திமுக, இட ஒதுக்கீடு மூலம் வன்னியர்கள் பிரதிநிதித்துவம் பெறுவதை விரும்பவில்லை. இதற்கு திமுக சொல்லும் காரணமும் சரியானதாக இல்லை.

கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளிவிவரங்களின் மூலம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று திமுக கூறியதை பாமக, வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக நான் மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால், 2008-ம் ஆண்டு புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி எந்த ஒரு மாநில, யூனியன் பிரதேசமோ முழுமையான விவரங்களை திரட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.

பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்புகள் செல்லும் என நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பொய்யான காரணங்கள் கூறுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சினையை பாமக எம்எல்ஏக்கள் கொண்டு வருவார்கள்.

ஆனால், சட்ட மன்றத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

சட்டப் பேரவை 100 நாட்கள் நடத்த வேண்டும். சட்டப் பேரவை நிகழ்வுகளை அடுத்த கூட்டத்திலாவது நேரடி ஒளிப்பரப்பு செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : மக்களவையில் நீட் முறைகேடு முதல் பைடன் – டிரம்ப் விவாதம் வரை!

கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

சும்மா கிழி…. அப்டேட் குமாரு

கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் கோடி கடன்: பெரியகருப்பன் அறிவிப்பு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0