திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மை தான் என தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் இன்று (செப்டம்பர் 20) தெரிவித்துள்ளார்.
ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதில் இருந்து, முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து குற்றம்சாட்டி வருகிறார்.
அந்த வகையில் ஜெகன்மோகனின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.
சந்திரபாபு நாயுடு உத்தரவு!
இதனையடுத்து திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டன.
இந்த செய்தி பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரிக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மாலை 4 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கலப்படம் உறுதியானது!
அப்போது அவர், “திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மை தான் என தெரியவந்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக நான்கு டேங்கர்களில் வந்த நெய் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், வெளியில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக கடந்த ஜூலை 6 ஆம் தேதி அனுப்பப்பட்டது.
நெய் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் இரண்டு பகுதிகளாக வந்தன. அதில் நெய்யின் தரம் 100 புள்ளிகளுக்குப் பதிலாக 20 புள்ளிகளாக இருந்தது. மேலும் நெய்யில் சோயா பீன்ஸ் எண்ணெய், மீன் எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனை தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனமும் (என்டிடிபி) உறுதி செய்துள்ளது.
லட்டு தயாரிக்க சுத்தமான பசு நெய்யை பயன்படுத்த தவறினால், புனிதம் கெடும். எனவே இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக புகாரில் சிக்கியுள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் வைத்திருக்கிறோம். மேலும் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே தற்போது கர்நாடகா அரசுக்கு சொந்தமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கி வருகிறோம்” என்று ஷியாமளா ராவ் தெரிவித்தார்.
ஒரு கிலோ பசு நெய் ரூ.320?
மேலும் அவர், “கலப்படம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு கிலோ பசு நெய் 320 ரூபாய்க்கு வழங்கப்படுவது தெரிந்தது. தரமான பசு நெய்யை எப்படி இவ்வளவு குறைந்த விலையில் வழங்க முடியும்? கலப்படம் செய்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, “திருப்பதி பிரசாதங்களின் கலப்படம் குறித்து சோதனை செய்ய தேவஸ்தானம் சார்பாக ஒரு ஆய்வகம் அமைப்பதற்கு ரூ.75 லட்சம் தான் செலவாகும். அதனை வரும் டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வெளியில் உள்ள ஆய்வகங்களுக்கு மாதிரிகளை அனுப்புவோம்” என்று ஷியாமளா ராவ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த இரு தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்!
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு… வாய் திறந்த ஜெகன் மோகன் ரெட்டி
கோவில் பிரசாதத்துல கலப்படம். அதுவும் தேசிய பால் வள ஆராய்ச்சி நிறுவனமே ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாட்டுக்கொழுப்பு, தாவர எண்ணெய் போன்ற பல கலப்படப்பொருட்கள் இருந்துள்ளன. மாட்டுக்கறி வச்சிருந்தான் என அடிச்சே கொன்னாய்ங்களே, அந்த மகராசனுங்க இதுக்கு என்ன செய்வாங்க?