ஆட்சிக்கு வந்த 15 மாத காலத்திலேயே விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று(நவம்பர் 11) காலை தொடங்கி வைத்தார்.
இதில், முதல்கட்டமாக கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகள் பயனடைகின்றனர்.
இலவச மின் இணைப்பை வழங்கிய பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.
ஏற்கனவே ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். இந்த விழாவின் மூலமாக 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
ஆகவே 15 மாதத்தில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை விட வேறு சாதனை இல்லை. எதையும் சொல்லிவிட்டு, பேசிவிட்டு செல்லும் அரசல்ல திமுக அரசு.
ஒரு இலக்கை தனக்குதானே வைத்துக்கொண்டு அதை முடித்துக்காட்டும் வல்லவராக திகழ்பவர் அமைச்சர் செந்தில்பாலாஜி.
நடக்குமா என்று கேட்பதை நடத்திக் காட்டுவதும், சாத்தியமா என்று கேட்பதை சாத்தியப்படுத்துவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும் தான் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி என்பதற்கு ஒன்றரை லட்சம் மின் இணைப்புகளை இலவசமாக வழங்கியதே ஒரு எடுத்துக்காட்டு.
இதன்மூலம் ஒன்றரை லட்சம் உழவர்கள் பயனடைய இருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை உருவாக்கித் தந்தவர் கலைஞர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆட்சி இருந்தது. அந்த 10 ஆண்டுகளிலும் 2.20 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நல்லாட்சியால் நல்ல மழை பெய்கிறது. இதனால் விளைச்சல் அதிகரித்து, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து விடப்பட்டுள்ளதால் அவர்களின் பொருளாதார வலிமை அதிகரித்துள்ளது.
பல்வேறு சமூக நலத்திட்டங்களின் மூலம் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் நிலையானதாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் திமுக அரசின் ஆட்சியினுடைய அடையாளங்கள்.
மின்தேவையை கருத்தில் கொண்டு அனல் மின்நிலையங்கள் மட்டுமல்லாது வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின்நிலையங்கள், நீரேற்று மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள், மின்கலன் சேமிப்பு நிலையங்கள்,
வாயுசூழல் எரிசக்தி நிலையங்கள் என 30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களை தமிழ்நாடு மின்கட்டமைப்புடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதனால் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 65,365 மெகாவாட் திறனாக உயரும். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழும்” என்றார்.
கலை.ரா
கொட்டித் தீர்க்கும் மழை: தட்டச்சு தேர்வு தேதி மாற்றம்!
ரெட் அலர்ட் : புழல் ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு!