ரூ.20,000 கோடிக்கு ஓனர் யார்? மோடியா, அதானியா?: ஜோதிமணி எம்.பி

அரசியல்

பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) சென்னை வந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சியினர் வள்ளுவர்கோட்டம் அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் குறித்து களத்தில் இருந்தவாறு ஜோதிமணி எம்.பி மின்னம்பலத்துக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில், “விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அதானி- நரேந்திர மோடி ஊழல் இதுகுறித்தெல்லாம் தொடர்ந்து பேசி வருவதால் ராகுல் காந்தியை பொய் வழக்கில் சிக்கவைத்து அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை பொறுத்தவரை அவர் செய்யும் ஊழலை, அராஜகத்தை அடக்குமுறையை யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது.

ராகுல் காந்தி கேட்கும் கேள்வி மிக எளிமையானது. அதானியின் சட்டத்துக்கு புறம்பான ஷெல் கம்பெனியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அதானியின் பணம் கிடையாது. அதற்கு எந்த ரெக்கார்டும் கிடையாது.

அப்படியானால் அந்த பணம் யாருடையது. 20 ஆயிரம் கோடி சிறிய தொகை கிடையாது. ஒரு நண்பருக்காக இந்த நாட்டையே விற்கிறார். வெளிநாடுகளுக்கும் சென்று அதானிக்கு பிசினஸ் பிடித்து கொடுப்பதுதான் மோடியின் வேலையாக இருக்கிறது.

ஒரு தனிநபரின் பிசினஸில் பிரதமர் மோடிக்கு என்ன ஆர்வம். ஒரு நண்பருக்காகவா இத்தனை எல்லைகளை பிரதமர் கடப்பார். உண்மையில் பினாமி அதானிதான். அப்படிபார்த்தால் அந்த பணத்துக்கு ஓனர் யார்?

இதை கேட்டால் நரேந்திர மோடிக்கு ஏன் கோவம் வருகிறது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் எல்லைக்கு அவர் சென்றது ஏன்?. மோடியின் மடியில் கனம் இருக்கிறது. அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார்.
டிஆர்ஐ, செபி எல்லாம் உங்கள் கையில்தானே இருக்கிறது. விசாரணை நடத்தி யாருடையது என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்” என ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய ஜோதிமணி, “3 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட வழக்கு இது. சட்ட வரலாற்றிலேயே தான் போட்ட வழக்கை அதை போட்டவரே நிறுத்தி வைக்க சொல்கிறார்.
ஆனால் ராகுல் காந்தி ஆதாரத்தோடு மோடி – அதானி ஊழலை அம்பலப்படுத்திய பிறகு வழக்கை நிறுத்தி வைக்க சொன்னவர் வாபஸ் வாங்குகிறார். 20 நாட்களில் விசாரித்து நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.
நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோரை குறிப்பிட்டுதான் ராகுல் சொன்னார். திருடர் என்று ராகுல் யாரை சொன்னாரோ, அவர் திருடர் இல்லை என்றால், ஊழல் செய்யவில்லை என்றால், அதானியின் பணத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லை என்றால் நீங்கள் சென்று மானநஷ்ட வழக்கு போட வேண்டியது தானே.
இந்தியாவில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் எல்லாம் 70 ஆண்டு கால காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது.
ஆனால் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் பிரதமர் தூக்கி அதானிக்கு கொடுக்கலாமா, அதற்கு சட்டம் இருக்கிறதா?.
எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
வரலாற்றில் இதுபோன்ற தீர்ப்புக்கு இப்படி யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. ராகுல் காந்தி ஒரு எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால பிரதமராக வாய்ப்பு உள்ளவர். மூன்று பிரதமர்களை பார்த்த குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாத யாத்திரை சென்றவர். அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தனர். இப்படிப்பட்டவரை அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தண்டிப்பார்களா?. இதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா?.
குலாம் நபி ஆசாத் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர்தான். இந்தமுறை அவரை நாங்கள் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு வருடம் ஆகியும் அவருக்கு வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பவில்லை.
பாஜகவைச் சேர்ந்த பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதவர்கள் டெல்லியில் நாங்கள் வசிக்கும் பகுதியில் வசிக்கிறார்கள். அவர்களை ஏன் காலி செய்ய சொல்லவில்லை.


காரணம் ராகுல் சொல்லும் உண்மை உங்களை அச்சுறுத்துகிறது. ஜெயிலுக்கு சென்றுவிடுவோம் என்று பயப்படுகிறீர்கள். அதனால் நீங்கள் ஜெயிலுக்கு போவதற்கு முன்னதாக அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். அதனால் தான் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்” என்றார்.

தமிழ்நாட்டில் கால் வைக்க பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று தெரிவித்த ஜோதிமணி, “நாடாளுமன்ற அவையை முடக்கியது எதிர்க்கட்சிகள் அல்ல. ஆளும்கட்சிதான்” எனவும் குறிப்பிட்டார்.

2026ல் பாஜக ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜோதிமணி, “முதலில் பிரதமர் தமிழகத்தில் கால்வைத்து போகட்டும். பிறகு ஆட்சி அமைப்பதை பற்றி பேசுவோம். கனவு காண எல்லோருக்கும் உரிமை இருக்கிறது” என்றார்.

ஆளுநர் விவகாரம் குறித்து பேசிய அவர், “ஆன்லைன் தடை சட்டம் அவசர சட்டமாக இருக்கும் போது அதற்கு உடனே ஒப்புதல் கொடுக்கிறார். ஆனால் மசோதாவாக அனுப்பும் போது திருப்பி அனுப்புகிறார். இதனிடையே ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் ஆளுநரை சந்திக்கிறார்கள். அப்போது ஆளுநர் மாளிகையில் என்ன நடந்தது. முதலில் அரசாங்க மசோதாவுக்கு ஆதரவாக இருந்த ஆளுநர் ஆன்லைன் சூதாட்டகாரர்களை சந்தித்த பின் ஒப்புதல் அளிக்காதது ஏன்?. உச்ச நீதிமன்றத்தை கூட மதிக்காத ஆளுநர் தான் இங்கு இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

மோடி போலீசைக் காட்டிலும் தமிழ்நாடு போலீஸ் அராஜகமாக இருக்கிறது என உங்கள் கட்சித் தலைவரே சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்திக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த தீர்ப்பு வந்ததும் ராகுல் காந்திக்கு ஆதரவாக தீவிரமாக ஒலித்த குரல் முதல்வர் ஸ்டாலின் உடையதுதான்.

ஜனநாயகத்தை நம்புகிற, சட்டத்தின் வழியில் ஆட்சி நடக்க வேண்டும் என்று நினைக்கிற முதலமைச்சர், ஒரு கட்சி ஜனநாயக முறையில் அமைதியான வழியில் பிரதமருக்கு கருப்புக் கொடியை காட்டுவதற்கு எதிர்ப்பு என்று சொல்லமாட்டார்.
அப்படி இருக்கும் போது ஒரு காவல்துறை அத்துமீறி பிரதமர் மோடிக்கு விசுவாசத்தை ஏன் காட்டுகிறது என்ற கேள்வி எழுகிறது” என குறிப்பிட்டார்.
பிரியா

“இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சி”: பிரதமர் மோடி பெருமிதம்!

மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி : மோடி முன் மு.க.ஸ்டாலின்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *