இங்கிலாந்து மகாராணி மரணமும், இந்தியாவின் வாரிசு அரசியல் தலைமை பிரச்சினையும்…

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (1926-2022) அவர்களுக்கு கடந்த வாரம் இங்கிலாந்து அரசின் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டபோது 193 உலக நாடுகளில் 167 நாடுகளின் பிரதிநிதிகள் அதிகாரபூர்வமாக கலந்து கொண்டார்கள்.

இதில் 18 மன்னர்கள், 55 குடியரசுத் தலைவர்கள், 25 பிரதம மந்திரிகள் அடங்குவார்கள். இந்தியாவின் சார்பாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டார். இங்கிலாந்தின் அரசியாக இரண்டாம் எலிசபெத் 1952ஆம் ஆண்டு முடி சூடியபோது உலகின் 32 நாடுகளுக்கு அவர் அரசியாக இருந்தார். இறக்கும்போது 15 நாடுகளின் அரசியாக அறியப்படுகிறார்.

எலிசபெத் அரச குடும்பத்தில் பிறந்ததால் வாரிசு உரிமையின்படி அரசியானவர். அவர் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் இறந்தவுடன் அரசியாக முடிசூட்டப்பட்டார். இவர் மரணத்திற்குப் பின் இவருடைய மூத்தமகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டப்பட்டுள்ளார்.

அப்படியானால் இங்கிலாந்தில் முடியாட்சிதான் நிலவுகிறதா என்றால் அப்படி இல்லை. அங்கே மக்களாட்சிதான் நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் ஆட்சி செய்கிறார்கள். ஆனால் குறியீட்டு அளவில் மன்னர் குடும்பமே ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது.

இந்திய குடியரசில் இந்தக் குறியீட்டு அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது. ஆனால் அவர்கூட வாரிசு முறையில் பதவி ஏற்பதில்லை. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், மக்கள் பிரதிநிதிகளால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஐந்தாண்டுக் காலமே ஆட்சி செய்கிறார். சமீபத்தில் தேர்வான பழங்குடியினத்தை சார்ந்த திரெளபதி முர்முதான் இந்தியக் குடியரசின் தலைவர் என்ற முறையில் இங்கிலாந்து அரசியின் அடக்க நிகழ்ச்சிக்குச் சென்றார்.

குறியீட்டு தலைமையை இங்கிலாந்து வாரிசு முறையில் மன்னர் பரம்பரைக்குக் கொடுத்தாலும் மக்களாட்சி நடைமுறையில் இந்தியாவைவிட சில விதங்களில் சிறப்பாக உள்ளது.

உதாரணமாக சமீபத்தில் கன்சர்வேடிவ் கட்சி பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே திரண்டார்கள். அவரை பதவி விலகச் செய்தார்கள்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் புகார் சொன்ன 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டது போல ஜான்சனுக்கு எதிராகப் பேசியவர்களை யாரும் நீக்கவில்லை. ஜான்சன் மட்டுமே நீக்கப்பட்டார்.

Indian succession politics and English monarchy system

அப்போது கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே அடுத்த பிரதமருக்கான தேர்தல் உண்மையாகவே நடந்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து லிஸ் டிரஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ரிஷி சுனாக் தோற்றார்.

இங்கே அ.இ.அ.தி.மு.க விதிகளில் கட்சி அடிப்படை உறுப்பினர்களே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இருந்தாலும், அது சாத்தியமில்லை என்றே ஊடகங்களில் அனைவரும் பேசுகின்றனர். ஏன் சாத்தியமில்லை என்று புரியவில்லை. இப்போது அகில இந்திய காங்கிரஸில் தலைவர் தேர்தல் நடக்கப்போவது நல்ல அறிகுறி.

எதனால் இதைச் சொல்கிறேன் என்றால் அப்படியெல்லாம் மக்களாட்சி நடைமுறைகள் முதிர்ந்துள்ள இங்கிலாந்தில் ஏன் இன்னும் வாரிசு அடிப்படையிலான மன்னர் குடும்பத்தை இறையாண்மையின் அடையாளமாக வைத்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்கத்தான்.

இங்கிலாந்து மட்டுமல்ல, பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கான்ஸ்டிடியூஷனல் மொனார்க்கி எனப்படும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட மன்னராட்சியே நடைபெறுகிறது. எந்த காரணத்தால் இப்படி ஒரு வாரிசு அடிப்படையிலான குறியீட்டு மன்னராட்சி தொடர்ந்து தேவைப்படுகிறது? ஏன் மக்கள் எலிசபெத் அரசி இறந்ததற்கு பெருந்திரளாகச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்? ஏன் அத்தனை உலக நாடுகளும் துக்கம் அனுஷ்டிக்கின்றன?

Indian succession politics and English monarchy system

இத்தனைக்கும் இங்கிலாந்தின் அரசியல் நகர்வுகளில் அரசிக்கு எந்த பங்குமே கிடையாது. அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராக தன்னுடைய அரசியல் பார்வைகளை, சனாதன தர்மத்தை  பிரச்சாரம் செய்வது போலவெல்லாம் செய்ய முடியாது.

எலிசபெத் மகாராணி எழுபதாண்டுக் கால ஆட்சியில் எந்தப் பிரச்சினையிலும் தன் சொந்தக் கருத்தை பொதுவெளியில் பேசியதே இல்லை. அவரிடம் அரசியல் தொடர்பான கருத்துகளை யாரும் கேட்கக்கூட மாட்டார்கள்.  

அப்படியிருந்தும் கூட மக்களுடைய வரிப்பணத்தை செலவழித்து ஒரு அரச குடும்பத்தை இங்கிலாந்து பராமரித்து வருகிறது. நாட்டின் அடையாளமாக கொண்டாடுகிறது. ஒரு மானுடவியல் சிந்தனையாளனாக ஏன் இவ்வாறு மக்களாட்சியின் மத்தியில் ஒரு மன்னர் குடும்ப பரம்பரை ஆட்சி குறியீடாக நிகழ்கிறது என்பதை சிந்திப்பது என் கடமையாகிறது.

அதே நேரம் இந்தியாவில் அரசியல் கட்சி தலைமைப் பொறுப்பிற்கு தலைவரின் வாரிசு வருவது மக்களாட்சிக்கு எதிரானது எனப் பல்வேறு தரப்பினரும், குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியும் தொடர்ந்து பேசி வருவதை காண முடிகிறது. இரண்டும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் என்றாலும், என்னால் வாரிசு தலைமை என்ற அம்சத்தில் தொடர்புபடுத்தி பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? தர்க்க பின்புலம் உண்டா?

இந்திய வெகுஜன அரசியலில் வாரிசு தலைமை ஏன்?

மன்னர் பதவி ஏன் வாரிசு அடிப்படையில் அமைந்தது? ஏன் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே உலகின் அனைத்து பகுதிகளிலும், நாடுகளிலும், இனக்குழுக்களிலும் இதே முறை பின்பற்றப்பட்டது? அந்தக் காலத்தில் செய்தித்தாள், தொலைக்காட்சி, இன்டர்நெட் எதுவும் கிடையாதே? பின்னர் எப்படி மன்னரின் சொந்த மகனோ, மகளோதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அத்தனை இனக்குழுக்களும், சமூகங்களும் நினைத்தன? ஏன் டைனாஸ்டி எனப்படும் வம்சாவழி ஆட்சி சாம்ராஜ்யங்களை ஆண்டது?

ஒரு முக்கிய காரணத்தை நாம் உடனடியாகக் காணலாம். ஒரு மன்னர் மறைந்தவுடன் யார் அடுத்த மன்னர் என்பதில் பல்வேறு குறு நில மன்னர்களிடையே போட்டி ஏற்பட்டால், சாம்ராஜ்யம் சிதைந்து விடும். இனக்குழுவின் பலசாலிகளிடையே போட்டி வந்தால் இனக்குழு சிதறிவிடும். ஒரு நாட்டில் படைத்தளபதி ஒருவரையும், மதகுரு ஒருவரையும், பிரதம அமைச்சர் ஒருவரையும் ஆதரித்தால் ஆட்சி சின்னாபின்னமாகி விடும்.

எனவேதான் அரசரின் மகனோ, மகளோதான் ஆட்சிக்கு வர வேண்டும் என முடிவு செய்தார்கள். இது எப்போதுமே ஒரு குறியீட்டுத் தலைமைதான். சிம்மாசனம், கிரீடம் என்று அலங்காரம்தான். உண்மையான அதிகாரம் பல பேரிடம் இருக்கும். அந்தப்புரத்திலும் இருக்கும், அரசவையிடமும் இருக்கும், அறிவாளிகளிடமும் இருக்கும்.

திறமையான மன்னர்கள் மந்திரிகளையும், மத குருக்களையும், ஏன் மக்களையும் கூட கலந்தாலோசித்து அனைவர் கருத்தையும் கேட்டு ஆட்சி செய்வார்கள். சர்வாதிகார குணம் கொண்ட மன்னர்கள் தன் இச்சைப்படி முடிவெடுத்து நாட்டை நாசமாக்குவார்கள்.

இதே நிலைதான் வெகுஜன கட்சிகளிலும் இருக்கிறது. தலைவரின் மகன் தலைவரானால் அதிகாரப் போட்டியில் கட்சி சிதையாமல் இருக்கும். அப்படி சொந்த மகனோ, மகளோ இல்லாவிட்டாலும் இன்னார்தான் என் வாரிசு என்று செல்வாக்குள்ள தலைவர் அறிவித்துவிட்டால் ஓரளவு பிரச்சினை இருக்காது. அதனால்தான் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேருவை தன் வாரிசாக அறிவித்தார். தனக்கிருந்த வெகுஜன செல்வாக்கை நேருவின் செல்வாக்குடன் இணைத்து அவரை வலுப்படுத்தினார்.

Indian succession politics and English monarchy system

நேருவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியைத்தான் முதலில் பிரதமராக்கினார்கள். ஆனால் கட்சிக்குள் பல விரிசல்கள் தோன்றின. அதனால்தான் சாஸ்திரி ஓரிரு ஆண்டுகளில் மறைந்தவுடன், கட்சியைக் காப்பாற்ற நேருவின் மகள் இந்திரா காந்தியை பிரதமராக்கினார் காமராஜர்.

கட்சி சில பிளவுகளைச் சந்தித்தாலும், வெகுஜன ஆதரவையும் கட்சி கட்டுமானத்தையும் இறுதியில் காப்பாற்றினார் இந்திரா காந்தி. அவர் கொல்லப்பட்டபோது நிலவிய பதற்றமான சூழலில் அதே போன்ற காரணங்களால்தான் அவர் மகன் ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார்.

இவர்களெல்லாம் வாரிசு தலைவர்கள், பிரதமர்கள் ஆனாலும் எல்லா முடிவுகளையும் இவர்களே எடுப்பார்கள் என்பது சாத்தியமே கிடையாது. எத்தனையோ அதிகாரிகள், செல்வாக்குள்ள முதலீட்டிய குழுக்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் இவர்கள் மீது தாக்கத்தை செலுத்துவார்கள்; பல முடிவுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலருடைய முன்முயற்சியில் எடுக்கப்படும். பழியோ, பாராட்டோ இவர்கள் குறியீட்டுத் தலைமைக்குப் போனாலும் இவர்கள் உண்மையில் சர்வாதிகாரிகள் அல்லர்.

Indian succession politics and English monarchy system

பாரதீய ஜனதா கட்சியில் என்ன நடக்கிறது?

காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் நடக்கிறது என்று கூப்பாடு போடுகிறது பாரதீய ஜனதா கட்சி. சென்ற வாரம் ராகுல் காந்தி தானும் சரி, தன் குடும்பத்தாரும் சரி தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

உடனே பாஜக என்ன சொல்கிறது என்றால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சோனியா காந்தி பின்னாலிருந்து அவரை இயக்கினார். அதுபோல இப்போதும் பொம்மை தலைவர்தான் வருவார். காந்தி குடும்பம்தான் பின்னாலிருந்து இயக்கும் என்று விமர்சனம் செய்கிறார்கள்.

காந்தி குடும்பத்தின் வெகுஜன செல்வாக்கை கண்டு பாஜக-காரர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த துடிக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் இல்லாவிட்டால் காங்கிரஸ் சிதறிப்போகும் என்று நம்புகிறார்கள்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க-வைத் தன் விருப்பம்போல பிளந்து, ஒட்டவைத்து விளையாடி அதனை வலுவிழக்கச் செய்வதுபோல காந்தி குடும்பம் இல்லாவிட்டால் காங்கிரஸையும் சிதறடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

சரி, வாரிசு கட்சி தலைமை மக்களாட்சிக்கு உகந்ததல்ல என்றே வைத்துக்கொள்வோம். நரேந்திர மோடி அடிமட்டத்திலிருந்து உயர்ந்த தலைவர்தான். ஆனால் பாஜக-வில் யாராவது மோடிக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதாக கடந்த எட்டாண்டுகளில் வரலாறு உண்டா?

பணமதிப்பிழப்பு படுதோல்வி அடைந்ததை பாஜக-வில் யாராவது கண்டித்தார்களா? ரஃபேல் பேரத்தை அனில் அம்பானிக்காக நிகழ்த்தியதை எதிர்த்து யாராவது பேச முடியுமா? பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோஹர் பரிக்கரால் வெளிப்படையாக தன் கருத்தைப் பேச முடிந்ததா?

வாரிசு தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாத காகிதப் புலிகள் எல்லாம் காங்கிரஸில் அறிக்கை வெளியிடுகிறார்கள். அவருக்கு அறிவுரை சொல்கிறார்கள். உழைப்பால் உயர்ந்த ஏழைத்தாயின் மகன் மோடிக்கு எதிராக மூச்சு விடக்கூட அவர் கட்சிக்காரர்கள் அஞ்சுகிறார்கள். எது மக்களாட்சி?

பாஜக-வின் பாசிசமா? வெகுஜன அரசியலின் வாரிசு தலைமையா?

சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மை மக்களை வெறுப்பரசியல் மூலம் திரட்டிவிட்டால் பின்னர் கட்சியை ஒற்றை மனிதரின் பின்னால் ஒடுக்கி விடலாம். அதன் பெயர்தான் பாசிசம். முசோலினியும், ஹிட்லரும் செய்து காட்டினார்கள். இடதுசாரிகளுக்கு எதிராக, யூதர்களுக்கு எதிராக மக்களை வெறுப்பரசியலில் திரட்டி தங்கள் பிம்பத்தினுள் அனைவரையும் அடக்கினார்கள்.

வெகுஜன அரசியல் கட்சிகள் அப்படி செய்ய முடியாது. அது பல்வேறுவிதமான மக்கள் குழுக்களையும் திரட்ட வேண்டும். ஜாதிகளாகவும், தொழில்களாகவும், ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என்று பல்வேறு சமூக அடுக்குகளில் பிரிந்திருக்கும் மக்களையெல்லாம் ஒன்று திரட்ட வேண்டும். அப்போது அவர்களுக்கு குறியீட்டு தலைமையாக மட்டுமல்ல, செயல்படும் தலைமையாகவும் வாரிசு தலைமையே சரிப்பட்டு வருகிறது. இல்லாவிட்டால் கட்சி சிதறிப்போய்விடும் ஆபத்து எழுகிறது.

வாரிசு தலைவரும் திறம்பட தலைமைப் பொறுப்பை வகித்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்; ஆட்சியைப் பிடிக்க முடியும். மக்களாட்சியில் வாரிசு தலைவராக இருப்பது கீழே வலையில்லாமல் சர்க்கஸ் பார் விளையாடுவது போலத்தான். கரணம் தப்பினால் மரணம்.

மன்னராட்சியிலும் அப்படித்தான் என்றாலும், ஓரளவு மரபின் வலிமை உதவும். தேர்தல்களைச் சந்திக்க வேண்டாம். ஆனால், மக்களாட்சியிலோ கட்சிக்குள்ளும் முரண்கள் எழும். தேர்தலிலும் பல்வேறு முரண்களைச் சந்திக்க வேண்டும். ஆனாலும் இந்திய சமூகம் போன்ற எண்ணற்ற அடுக்குகளும், பிரிவுகளும் கொண்ட சமூகத்தில் வெகுஜன கட்சிகளுக்கு வாரிசு தலைமை கைகொடுக்கிறது.

இந்திய அளவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிஹாரில் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், ஒரிஸாவில் நவீன் பட் நாயக், ஆந்திராவில் ஜகன், மஹாராஷ்டிராவில் பவார் குடும்பம், உத்தவ் தாக்கரே, தமிழ் நாட்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று வாரிசு தலைவர்களே பாரதீய ஜனதாவிற்கு சவாலாக இருக்கிறார்கள்.

தங்கள் கட்சிக்குள் எதேச்சதிகார தலைவரை மறுத்து, எதிர்த்து ஒரு சொல் பேச முடியாத பாஜக பொம்மைகள் எல்லாம் வாரிசு தலைமை மக்களாட்சிக்கு எதிரானது என குதிக்கின்ற காட்சி வேடிக்கையாக இருக்கிறது.

இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் சுதந்திரவாத ஊடகர்கள், முற்போக்காளர்கள், நடுநிலை மேதைகள்தான். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பாசிசம் நிச்சயமாக வேண்டாம்; அதற்காக வாரிசு தலைமையும் வேண்டாம்; நாம் ஏன் சுதந்திரவாத லட்சியத்தில் அனைவரும் விவாதித்து சம அளவில் அமர்ந்து பேசி புதிய புதிய தலைவர்களை உருவாக்கி மகிழக்கூடாது என்று கேட்கிறார்கள்.

அவர்களிடம் நான் கேட்க விரும்புவது இதுதான்.  நண்பர்களே, எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாக்ன கார்டா என்ற ஒப்பந்தத்தை மன்னருடன் போட்டு, நாடாளுமன்றம் என்ற வடிவத்துக்கு வித்திட்ட, இந்தியாவையும் தொண்ணூறு ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களாட்சியில் நுழைத்துவிட்ட இங்கிலாந்து ஏன் இன்னமும் மன்னர் குடும்பமே தங்களை ஆள்வதாக நாடகம் நடத்துகிறது என்று உங்களால் கூற முடியுமா?  

அது குறியீடுதான் என்பது எனக்கும் தெரியும். ஏன் தேவைப்படுகிறது அந்த குறியீடு என்பதே கேள்வி. ஆக்ஸ்ஃபோர்டிலும், கேம்பிரிட்ஜிலும் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் கல்வி பயிற்றுவித்தார்களே, அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது இந்த குறியீடு?

இந்தியாவில் தங்கள் வாழ்வை மேம்படுத்திய தலைவருக்காக தீக்குளிப்பவர்கள் முட்டாள்கள், ஒன்றுமே செய்யாத குறியீட்டு அரசிக்காக இங்கிலாந்தில் கண்ணீர் வடிப்பவர்கள் மேதைகளா?

சுதந்திரவாதிகளே! சிந்தியுங்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:

Rajan Kurai Krishnan

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செப்டம்பர் 18: எழுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய எழுச்சிமிகு மாலை!

கிச்சன் கீர்த்தனா – வரகு – கம்பங்களி

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
1
+1
0

2 thoughts on “இங்கிலாந்து மகாராணி மரணமும், இந்தியாவின் வாரிசு அரசியல் தலைமை பிரச்சினையும்…

  1. வெறும் வாரிசு அரசியலாலும் வெற்றி பெறமுடியாது.பாஜக வின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் அதன் கட்டமைப்பு.ஆனால் ஆந்திராவிலும் கேனளாவிலும் காங்கிரசு வாரிசுஅரசியலை ஊக்குவிக்கவில்லையே

  2. சிறப்பான கட்டுரை.
    வாரிசு அரசியலைப் பற்றி இன்னும் ஆழமாக புரியவைக்கிறது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *