அபாய நிலையில் பாலங்கள்: அரசின் கவனம் அவசரம்!

அரசியல்

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள் இருப்பதாகவும் , உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு ஆற்றுப் பாலம் அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்நிலையில் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது பாலத்தின் முதல் 15 மீட்டர் வரை அதிகப்படியான அதிர்வு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அப்பகுதியில் அச்சத்துடனே பயணம் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் தடுப்புகள் அமைத்து விழுப்புரம் நோக்கி செல்லும் வாகனங்களை… திருச்சி-சென்னை சாலையில் ஒருவழி பாதையாக மாற்றம் செய்து திருப்பி அனுப்பினர். இதனையடுத்து சேதமடைந்துள்ள பாலத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று ( ஜூலை 29 ) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மோகன் , “விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான ஒங்கூர் பகுதியில் ஒங்கூர் ஆற்றின் மீது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மூன்று இணைப்புகளை கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு இணைப்பிற்கும் நடுவில் ஸ்பிரிங், பேரிங், சீட்ஸ் போன்ற கருவிகள் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதனால் பாலத்தின் முதல் இணைப்பில் இருந்து விலகி உள்ளதால் பாலம் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான முறைப்படி பாலம் நிலையாக உள்ளது. பாலத்திற்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கருவிகளின் செயல்காலம் முடிந்ததால் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும் இதை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் அலுவலர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் அவர் அன்றாடம் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிப்பார் என்றும், 10 முதல் 15 நாட்களுக்குள் இந்த பாலத்தின் வேலையை விரைந்து முடித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் , இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஆற்றுப் பாலம் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்லும்போது தாலாட்டுவதுபோல ஆடியது. விபத்து அச்சத்துடனேயே இப்பாலத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்யும் பரிதாப நிலை நீடித்தது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வைரலான பிறகுதான், அதிகாரிகள் ஆற அமர நடவடிக்கை எடுக்கின்றனர். பாலத்தை தொடர்ந்து பராமரித்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. தற்போதும் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்காமல், மக்களின் பாதுகாப்பை நினைவில்கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல, தமிழ்நாடு முழுவதும் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், மிகவும் மோசமான நிலையில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, அவற்றை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் கூடாது ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *