கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்துவ அமைப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்த்து அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு மற்றும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு போன்ற அரசின் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியல் இன மக்களுக்கான சட்ட சலுகைகளை வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார்.
அதற்கு பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது.
மிகப்பெரிய மாநாட்டில் நன்றி விழா
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான இனிகோ இருதயராஜ் பேசுகையில், “இச்சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தலித் கிறிஸ்துவ மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய ஒரு மாநாட்டை நடத்தி அதில் முதலமைச்சருக்கு நன்றி பாராட்டு விழா நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ”தேர்தல் ஆதாயங்களைப் பற்றி கவலைப்படாமல் சமூகத்தின் நியாயங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்ற முதலமைச்சராக நம்முடைய
முதலமைச்சர் திகழ்கிறார் என்றும், இவ்வரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் தேவாலயப் பணியாளர்களுக்கு வாரியம் அமைத்தது,
கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு
நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்கும் நன்றி.” என்று தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன், தென்னிந்திய திருச்சபைகள் மாமன்ற செயலாளர் பெர்னான்டஸ் ரத்தினராஜா, தலித் கிறிஸ்துவ விடுதலை முன்னணி தலைவர் பேராசிரியர் மேரிஜான், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மேத்யூ மற்றும் பல்வேறு கிறிஸ்துவ மாமன்ற பேராயர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
சூரத்தை தொடர்ந்து பாட்னா: மீண்டும் நீதிமன்றம் முன் நிற்கும் ராகுல்காந்தி
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி55 ராக்கெட்!