விரைவு போக்குவரத்தில் ஒப்பந்த ஓட்டுநர்கள் கூடாது : ராமதாஸ்

Published On:

| By Prakash

“தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கக்கூடாது” என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (ஆகஸ்ட் 27) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுனர்களை பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள்,

செப்டம்பர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், செப்டம்பர் 13ஆம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இது போக்குவரத்து பணியாளர்களை எந்த உரிமையும் இல்லாத கொத்தடிமையாக மாற்றும் நடைமுறையின் முதல் படியாகும். இதை அனுமதிக்க முடியாது.

இந்த புதிய நடைமுறையின்படி ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம், விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 400 ஓட்டுனர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும்.

நிரந்தர ஓட்டுனர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதைவிட குறைவான ஊதியத்தை 400 பேருக்கும் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வழங்கும்.

அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு வழங்கும்.

Contract driver should not be appointed

இது தொடக்க நிலை நிரந்தர ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது.

சுருக்கமாக கூற வேண்டுமானால், இப்போது அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் இனி அமைப்பு சாராத தினக்கூலி தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள்.

இது போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் செயல் ஆகும். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த முறை தான் அரசுத் துறைகளில் புதிய மாடலாக உருவெடுத்து வருகிறது.

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அதன் நிர்வாகமே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரந்தர ஓட்டுனர்களை நியமித்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை.

ஆனால், ஓட்டுனர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதை தவிர்க்கவே இத்தகைய குறுக்குவழியை விரைவுப் போக்குவரத்துக் கழகம் கையாள்கிறது.

இதை போக்குவரத்துத்துறை கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதன் அதிகாரிகள் இதை கண்டும் காணாமலும் இருப்பது, உழைப்புச்சுரண்டலுக்கு துணை போவதாகவே பொருள்.

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது.

இதுவே வழக்கமாக மாறி, ஒரு காலத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மட்டும்தான் அனைத்துத் துறைகளிலும் பணியில் இருப்பார்கள்.

அத்தகைய நிலை தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்;

அதற்கு பதிலாக அனைத்து உரிமைகளுடன் கூடிய நிரந்தர ஓட்டுனர்களை அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

பேருந்துகள் தனியார் மயம்… முதலில் சென்னை, பின் தமிழ்நாடு: ராமதாஸ் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel