வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி பாமகவினர் சட்டப்பேரவையில் இருந்து இன்று (ஜூன் 24) வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (ஜூன் 24) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக சட்டமன்றக்குழு தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், “இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை. சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக இருக்கும்.
10.5 சதவீத தரவுகள் இல்லாததால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான தரவுகளை பெற்றுத்தர நீதியரசர் பாரதிதாசன் குழுவை அமைத்துள்ளோம்” என்றார்.
பின்னர், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், தமிழகத்தில் அமல்படுத்த முடியும். பீகார் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இடஒதுக்கீடு பிரச்சனைக்கு தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி நடப்பு கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும். இதனை பாமக ஆதரிக்க வேண்டும்.” என ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இதுகுறித்து பேசுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும். மாநில அரசு நடத்த முடியாது” என்று விளக்கமளித்தார்.
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. மேலும், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி சட்டமன்றத்தில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி, “இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நான் பேசியபோது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேர்ச்சி மதிப்பெண் வெளியிடுகிறார்கள்.
அதில் தொடர்ந்து கடைசியில் இருப்பது வன்னியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய வட மாவட்டங்கள். இதை சரிசெய்வதற்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றேன். பேரவையில் என்னை பேசவிடாமல் தடுக்கின்றனர்.
உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் இருக்கிறது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே உள் ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த முதல்வர் ஸ்டாலினின் பேச்சு திருப்தியளிக்கவில்லை. அமைச்சர்கள் இதற்கு பதிலளித்தபோது இடையில் புகுந்து சட்டப்பேரவை தலைவர் அவர்களை பேசவிடாமல் செய்கிறார்.
10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என ஜி.கே.மணி பேட்டி அளித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம்… ஆளுநரிடம் நாளை புகார்: ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி ஆவேசம்!
கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை: ஆளுநரிடம் பாஜக மனு!
இதெல்லாம் அங்க போயி நாங்கள்ளாம் கேக்க முடியுமா?