வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கலாநிதி வீராசாமி எம்.பி.மீண்டும் போட்டியிடுகிறார்.
தேரதல் நெருங்குவதையொட்டி ராயபுரம், கொளத்தூர், பெரம்பூர், திருவொற்றியூர் என தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் கலாநிதி வீராசாமி ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்த 5 ஆண்டு காலத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா கால கட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்திருந்தார்கள்.
இங்கிருக்கும் தொழிற்சாலைகள் வழங்கும் பங்களிப்பான சிஎஸ்ஆர் மூலம் நிதி பெற்று பல திட்டங்கள் செய்திருக்கிறோம்.
பள்ளிக்கூடங்கள், மருத்துவ உபகரணங்கள் , பார்க் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.
கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு கட்டவேண்டியிருந்தது. இது இல்லாததால் இந்த பகுதியில் கடல் அலை அதிகமாக இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று வரும்போது பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. 141 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் இது.
இந்த திட்டத்துக்கு சென்னை போர்ட் ட்ரஸ்ட் ரூ.120 கோடியும், மீதமுள்ள 21 கோடி ரூபாய் மாநில அரசுதான் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த 21 கோடியும் அவர்களே கொடுக்க வேண்டும் என்று சொன்னோம்.
இது எப்படி சாத்தியமானது என்றால், அந்த நிறுவனத்தினர் எங்கு பணி செய்து கொண்டிருக்கிறார்களோ, அந்த சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்களுக்காக சிஎஸ்ஆர் நிதி கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர்களின் தொழில் காரணமாக அந்த பகுதிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.அதற்காக சமூகப் பொறுப்பு நிதி கொடுக்க வேண்டும்.
இந்நிலையில் சென்னை போர்ட் ட்ரஸ்ட் குஜராத்தில் இருக்கக் கூடிய ஒரு ட்ரஸ்டுக்கு 75 கோடி ரூபாய் அனுப்புகிறார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து துறைமுகங்களில் இருந்தும் 500 கோடி ரூபாய் அந்த துறைமுகத்துக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினோம். சிஎஸ்ஆர் என்பது மக்களின் உரிமை. அது அந்த பகுதி மக்களுக்கு சேர வேண்டும். அந்தவகையில் சிஎஸ்ஆர் மூலம் அந்த முகத்துவாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 6 மாதத்தில் முடிந்துவிடும்.
இதுதவிர திருவொற்றியூர், ராயபுரத்திலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் திட்டமும் வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இங்கு சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டது. இனி எவ்வளவு மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வாயுகசிவு பிரச்சினை ஏற்பட்டது. அமோனியா கசிவால் மக்களுக்கு உடல்நிலை பிரச்சினை எற்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி மத்திய சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். இந்நிறுவனத்தை மூட வேண்டும் என்று மனு கொடுத்தேன்.இப்போது அந்த நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறினார்.
நேர்காணல் : பெலிக்ஸ் இன்பஒளி
தொகுப்பு : பிரியா
வீடியோவில் பேட்டியை காண: அதிமுக, பாஜக டெபாசிட் வாங்குமா பார்க்கலாம்?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ரூ.2000 ஆக உயரும்” : கதிர் ஆனந்த்
டாக்டர் கிருஷ்ணசாமி Vs ஜான் பாண்டியன்…தென்காசியைக் கைப்பற்றப்போவது யார்?