உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் பந்தேல்கண்ட் நான்கு வழி விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 16) திறந்து வைத்தார்.
சுமார் 14,850 கோடி ரூபாய் செலவில் 296 கிமீ தூரத்திற்கு நான்கு வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2020 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 28 மாதங்களில் இந்த விரைவு சாலை அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இந்த சாலை உத்தரப் பிரதேசத்தின் சித்ரகூட், பந்தா, மகோபா, ஹமிர்பூர், ஜவான், அவுரையா, எட்டாயா ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா – லக்னோ விரைவுச் சாலைகளில் இந்த நான்குவழிச் சாலை இணையும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நான்கு வழிச் சாலையிலிருந்து ஆறு வழி சாலையாக மாற்றி அமைப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2022-23 பட்ஜெட்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு ரூ.1.99 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் ரூ. 30,300 கோடியாக 2013-14ல் இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 91,287 கிமீ (ஏப்ரல் 2014 இல்) இருந்து சுமார் 1,41,000 கிமீ (டிசம்பர் 31, 2021 நிலவரப்படி) அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமாக நீண்டுள்ளது.
மோனிஷா