முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீதான வழக்குகளை திரும்ப பெறுக: எடப்பாடி

காவல்துறை முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 25) வலியுறுத்தியுள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபியும், அதிமுக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான நட்ராஜ், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து வாட்ஸப் குரூப்பில் அவதூறு பரப்பியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, சென்னை நந்தனம் Big Bull Lounge தனியார் மதுக்கூடத்தில் நவம்பர் 20-ஆம் தேதி பிரச்சனையில் ஈடுபட்ட நியூஸ் தமிழ் செய்தியாளர் சுதர்சன் உள்ளிட்டோர் மீது J1 சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மற்றும் நியூஸ் தமிழ் சேனல் செய்தியாளர் மீது புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க. ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களை தோலுரித்துக்காட்டும் நமது அதிமுக ஐடி விங் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒருசில தொலைகாட்சிகள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது.

கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் மந்திரிகள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணைய குழு முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது,  திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது.

காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கே.எஸ்.அழகிரியை கண்டித்து ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் போராட்டம்!

பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts