போட்டோ சூட் முதல்வர் – பல்கலையை மூடி மணல் கொள்ளை : சி.வி சண்முகம் காட்டம்!

அரசியல்

மரக்காணம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திண்டிவனத்தில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுக ஆட்சியில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ரூ.1,500 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால், திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது.

எனவே உடனடியாக நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று (ஆகஸ்ட் 27) திண்டிவனம் காந்தி சிலை அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், “அனைத்து கிராமப்புற மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக 1502 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

நாளொன்று 60 எம்.எல்.டி தண்ணீரை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இன்று ஆட்சியில் உள்ள திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதோடு, அதிமுக அரசு திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் அவர்கள் மக்களின் நலனுக்காக கொண்டு வந்த திட்டத்தை ஏன் ரத்து செய்கிறார். விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று இரு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

திமுக எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ஏன் முயற்சி எடுக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயத்தையே நம்பியிருக்கிற மாவட்டம் விழுப்புரம். கல்வியில் பின் தங்கிய மாவட்டம். தொழிற்சாலைகளும் இல்லை.

குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தினம் தோறும் வேலைக்கு சென்றால் தான் அடுப்பு எரியும் என்ற மக்கள் உள்ள மாவட்டம். இப்படிப்பட்ட மாவட்டத்துக்கு பல்வேறு திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கல்வி மேம்பாட்டுக்காக ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் கொண்டு வரப்பட்டது. அந்த பல்கலைக் கழகத்தை மாற்றியிருக்கிறார்கள். விழுப்புரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக கல்வி கற்கக் கூடாதா?.

இன்று அந்த பல்கலைக் கழக வளாகத்தில் செம்மண் கொள்ளை நடக்கிறது. 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கொள்ளை அடிக்கப்படுகிறது.

செம்மண் கொள்ளையடித்தவர் யார் என்று விழுப்புரம் மக்களுக்குத் தெரியும். தினம் தோறும் அந்த அமைச்சர் நீதிமன்றம் ஏறுவதும் மக்களுக்குத் தெரியும்.

அரசு பல்கலைக் கழகத்தை மூடிவிட்டு, திமுகவைச் சேர்ந்தவர்கள் தனியார் பல்கலைக் கழகத்தை திறக்க பணிகளை செய்து வருகின்றனர்” என்றார்.

மரக்காணம் கடல்நீர் திட்டத்தை நிறுத்திவிட்டு மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.

கர்நாடகா தண்ணீர் கொடுக்க முடியாது என்கிறது. இவ்வாறு பல சட்ட சிக்கல்கள் இருக்கும் போது மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறோம் என்று காதில் பூ சுற்ற பார்க்கிறார்கள்” என்று விமர்சித்தார்.

இறுதியாக, ”கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முதல்வர் போட்டோ சூட் நடத்தி கொண்டிருக்கிறார். இதுதான் ஒரு முதல்வருடைய வேலையா” என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.