பொதுக்குழுவை தடுக்கத்தான் இந்த ரெய்டு: அதிமுக வழக்கறிஞர்!
முன்னாள் அமைச்சர் காமராஜுக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், அவரை வழக்கறிஞரிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்று அதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
2015 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 500 சதவிகிதம் அதாவது ரூ. 58.44 கோடி சொத்து குவித்துள்ளதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
இன்று (ஜூலை 8) காலை முதல் அவருக்குத் தொடர்புடைய 49 இடங்களில் சோதனை நடந்து வரும் நிலையில் காமராஜின் வழக்கறிஞரும், அதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், “லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துகிறது என்றால் அதனை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சட்டப்படி பார்த்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோ அவருக்குச் சட்ட ரீதியான உரிமைகளைக் கொடுக்க வேண்டும். இன்று காலை 7.41 மணிக்கு நான் தொலை பேசி மூலம் காமராஜ் எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் தொலைப்பேசியைக் கொடுக்கவில்லை. இது சட்டப்படி அவருக்குரிய உரிமையை மீறும் செயலாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி, குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் சட்ட உரிமையைக் கொடுக்க வேண்டும். அவருடைய வழக்கறிஞரிடமே பேச விடவில்லை எனில் என்ன அர்த்தம். 10 பக்கத்துக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.
அவரை கட்டிப்போட்டு விசாரிக்கிறார்களா? அல்லது முட்டிப்போடச் சொல்லி விசாரிக்கிறார்களா என தெரியவில்லை. அவருடைய வழக்கறிஞரான எனக்கு, அவரை கண்ணியமாக நடத்துகிறார்களா என பார்க்கிற உரிமை இருக்கிறது. ஆனால் என்னை உள்ளே செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். இது சட்டப்படி தவறு.
அரசியல் ரீதியாகப் பார்த்தால் இது பழிவாங்கும் செயல். திமுகவை எதிர்க்கும் வலுவான இயக்கம் அதிமுகதான். அந்த இயக்கத்தை ஒற்றைத் தலைமைக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மத்தியிலேயே வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை வந்தால் அது தங்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்று திமுக திடமாக நம்புகிறது.
எனவே அதிமுகவில் உள்ள திமுகவின் ரகசிய நண்பர்கள் மூலமாகத் தடுக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக ஒரு பேட்டி அளித்தார். அதில் பொதுக்குழு நடத்தப்படாமல் இருக்க சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம் என்றார். தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
இதில் தமிழக அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று நினைத்தேன். தற்போது தான் புரிகிறது. 11ஆம் தேதி பொதுக்குழு தொடர்பான பணிகளைக் கவனித்து வந்த காமராஜை முடக்குகிற வகையில் அவர் மீது ரெய்டு கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.
ஒற்றைத் தலைமை உருவாகக் கூடாது என்ற நோக்கில் பொதுக்குழு நடக்காமல் செய்து அதிமுகவை முடக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. இதற்கு உதாரணம் காமராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டு” என்று கூறினார்.
மேலும் அவர், “திமுக அமைச்சர்கள் 23 பேர் மீது வழக்கு இருக்கிறது. இதில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு 13 இருக்கிறது. அந்த வழக்குகளை விசாரித்து விரைவுபடுத்தாமல் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு வைக்கிறார்கள். அதிமுகவுக்கு ஒரு விஜிலன்ஸ் போலீஸ், திமுகவுக்கு ஒரு விஜிலன்ஸ் போலீஸ் இருக்கிறார்களா. எல்லோருக்கும் ஒரே சட்டம்தானே. இதெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கை” என்று குறிப்பிட்டார்.