பொதுக்குழுவில் அனைத்துத் தீர்மானங்களும் நிராகரிப்பு: கே.பி.முனுசாமி,  சி.வி. சண்முகம் அறிவிப்பு! 

அரசியல்

இன்று கூடியுள்ள அதிமுக  பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர் செல்வத்துக்குமான முரண்பாடுகள் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன.

காலை 10.30 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வானகரம் பொதுக்குழு மண்டபத்துக்கு வந்தடைந்தார். அவர் வரும்போது எடப்பாடி ஆதரவாளர்களின், ‘துரோகி ஒழிக ஓபிஎஸ் ஒழிக’ என்ற கோஷங்கள் கேட்டன.  துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மேடையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து, ‘துரோகி இறங்கு…துரோகி இறங்கு…’ என்று  தொண்டர்கள் பெருங்குரல் எழுப்ப ஒரு கட்டத்தில் அவர்  மேடையில் இருந்து இறங்கிவிட்டார்.

காலை 8  மணியளவில் பசுமை வழிச் சாலையில் இருக்கும் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி காலை 11.20 மணிக்கு பொதுக்குழு அரங்குக்கு வந்தார். அப்போது,  ‘கழகப் பொதுச் செயலாளரே வருக…..ஒற்றைத் தலைமையே வருக’ என்றெல்லாம் முழக்கங்கள் எழுப்ப கடுமையான நெரிசலுக்கு இடையில் மேடையை நோக்கி நகர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. சரியாக 11.30 மணிக்கு தனியார் பாதுகாவலர்கள் புடை சூழ மேடைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரைத் தொடர்ந்து மேடைக்கு வந்தார் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். நடுவே தற்காலிக அவைத் தலைவர் அமர்ந்திருக்க இரு பக்கமும் எடப்பாடியும், பன்னீரும் அமர்ந்திருந்தனர். இருவர் முகமும் இறுக்கமாக இருந்தன. 

தற்காலிக அவைத்  தலைவர் தமிழ் மகேன் உசேனை தலைமை தாங்கி நடத்துமாறு ஓ.பன்னீர் செல்வம் தீர்மானத்தை முன்மொழிய, அதை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.அடுத்து தீர்மானங்கள் முன் மொழிவதற்கு முன்னர்…. திடீரென மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் மைக்கைப் பிடித்து அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது  என்றார்.

தொடர்ந்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, “இந்தப் பொதுக்குழு அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டது. தொண்டர்களின் ஒரே தீர்மானம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான்.  ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து  அடுத்து தலைமை எப்போது பொதுக்குழுவை கூட்டுகிறதோ அப்போது இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றலாம்” என்று அறிவித்தார்.இதனால் பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *