கேரள சட்டசபை, பெண்களை அவமதிக்கும் கௌரவர்களின் சபை அல்ல என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி கூட்டணி பாடம் எடுத்துள்ளது.
கடந்த 13ஆம் தேதி கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ரீமா பேசியிருந்தார். இதையடுத்து ஜூலை 14ஆம் தேதி கேரள சட்டப்பேரவையில் காவல்துறைக்கு நிதி ஒதுக்குவது குறித்தான விவாதம் நடைபெற்றது. அப்போது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மணி ”முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பேசிய மிகப்பெரிய நபரான ரீமா விதவையாகிவிட்டார். அது அவரது விதி. அதற்கும் இடது சாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியது சட்டப்பேரவையில் இருந்த சக உறுப்பினர்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது.
அதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர் எம்.எம்.மணிக்கு எதிராக குரல் எழுப்பினர். ஜூலை 15ம் தேதி அன்றும் சட்டப் பேரவையில் அமளி தொடர்ந்ததால் பேரவை நிகழ்வுகள் முடங்கின.
திங்கள் கிழமை அன்று சட்டப்பேரவையில் பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், ”கேரளா ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம். பெண்கள் விதவையாவது விதியால் தான் என்கிற முடிவுக்கு வரக்கூடாது. துரியோதனர்களும் துச்சாதனர்களும் பெண்களை அவமதிக்க இது கௌரவர்களின் சபை அல்ல. இது சட்ட சபை. இதை கௌரவர்களின் சபையாக மாற்றிவிடாதீர்கள். மார்க்சிஸ்ட் உறுப்பினர் மணியின் கருத்தை பேரவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என கூறினார்.
இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் மணி மன்னிப்பு கேட்டு தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திள்ளனர்.
ராஃபிக்