பீகார் புதிய அமைச்சரவை: யார் யாருக்கு எந்தத் துறை?

அரசியல்

பீகாரில் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்ட நிலையில் புதிய அமைச்சரவை விரிவாக்கம் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகு நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பதவியேற்பு

பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்தக் கூட்டணியில் நிதிஷ்குமாரையே முதலமைச்சராக்க ஆர்.ஜே.டி நிர்வாகிகள் ஒத்துக்கொண்டனர். அதன்படி நிதிஷ் முதல்வராக துணை முதல்வர் பதவி தேஜஸ்விக்கு வழங்கப்பட்டது. இருவருக்கும் ஆளுநர்  பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

புதிய அமைச்சரவை எப்போது?

இதனைத் தொடர்ந்து ஜேடியு – ஆர்ஜேடி கூட்டணியின் புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு எந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தற்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மட்டுமே பதவியேற்றுக் கொண்ட நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

ஆர்ஜேடி-க்கு அதிக இடம்

பாஜக- ஜேடியு கூட்டணியில் ஜனதா தளத்தைவிட பாஜகவே அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதனால் நிதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, சுற்றுச்சூழல், வனம், தொழில், விவசாயம், வருவாய், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத்துறைகள் பாஜக வசமே இருந்தன. தற்போதும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திடமே அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் புதிய அமைச்சரவையில் அவர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்படலாம்.

இரண்டு கட்சிகள் போட்டி

அதன்படி நிதித்துறை,  நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகர திட்டமிடல் துறைகள் தேஜஸ்வி யாதவ் கட்சிக்கு ஒப்படைக்கப்படலாம். மேலும் விவசாயம் மற்றும் நில வருவாய் துறைகளையும் ஆர்ஜேடி கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சகங்களுக்கு இரண்டு கட்சிகளுமே  போட்டியிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் சுகாதாரம் மற்றும் உள்துறை யாருக்கு என்பது முடிவு செய்யாமல் இருக்கிறது.

உள்துறையை தரமாட்டார்

பாஜக கூட்டணியின் போது உள்துறை, பொது நிர்வாகம், லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவற்றை தன்வசம் வைத்திருந்தார் நிதிஷ் குமார். 2005 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற பிறகு இதுவரை உள்துறை அமைச்சகத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் இந்தமுறையும் அந்தத்துறை அவர் வசமே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் சபாநாயகர்?
இதேபோன்று கல்வி, சிறுபான்மை நலத்துறை,  நீர், தகவல் மற்றும் மக்கள் தொடர்புகள், கட்டிட கட்டுமானம், கண்காணிப்பு மற்றும் வேறு சில துறைகள் ஆர்ஜேடி-க்கு ஒதுக்கப்படலாம்.  இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியில் இருந்து ஒரு அமைச்சரும், காங்கிரஸ் கட்சியில் இரண்டு அமைச்சர்களும் நியமிக்கப்படலாம். அதேசமயம் பீகார் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் போட்டி போடுவதாக சொல்லப்படுகிறது.

மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்களான சுனில் சிங், சுதாகர் சிங், பாய் வீரேந்திரா, அனிதா தேவி, அலோக் மேத்தா, பூதேவ் சவுத்ரி, முகமது கம்ரான், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். ஜக்கிய ஜனதா தளத்தில் இருந்து விஜய் குமார் சவுத்ரி, சஞ்சய் ஜா மற்றும் அசோக் குமார் சவுத்ரி ஆகியோர் அமைச்சர்களாகத் தேர்வாவார்கள் என்று பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-கலை.ரா
 
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.