சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (டிசம்பர் 26) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ” கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை 6 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் எங்களுக்கு கிடையாது. அவர் திமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் கூட இல்லை. ஆனால், சில ஊடகங்களில் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் அவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.
துணை முதல்வர் நடந்து செல்லும் போது அந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. கேமரா போன்கள் அதிகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்று புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க முடியாது.
கைது செய்யப்பட்டவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். அந்த பகுதியைச் சேர்ந்த பலர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவிக்க வரலாம். அதில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம். ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவருக்கு நிச்சயமாக தண்டனை வாங்கி கொடுப்போம்.
இது ஒன்றும் பொள்ளாச்சி வன்கொடுமை போன்ற சம்பவம் இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில், ஒரு முக்கிய பிரமுகரின் மகன் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்.
அதை மறைக்க அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தார்கள். எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமேஸ்வரத்தில் அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் மருமகன் ராஜேஷ்குமார் பெண்கள் குளிக்கின்ற அறையில் கேமராவை வைத்து வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுகவில் அதுபோன்று தவறு செய்பவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். தவறு செய்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுவோம். தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின் படி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிகவும் குறைவு.
இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வியில் படிக்கும் பெண்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள். அதை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற யாரேனும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்களா என்று போலீசார் விசாரணையில் தான் தெரியவரும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை அரசின் தரப்பில் வெளியிடவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
19 வயது பையன்பா… கோலி வேண்டுமென்றே மோதியதாக குற்றச்சாட்டு!