விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில், கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளிக்கும் போது, தமிழ்நாடு அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஒட்டுமொத்த இந்தியாவின் விலைவாசி உயர்வு குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தை மட்டும் குறிப்பிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையானது.

இந்தநிலையில், இன்று (ஆகஸ்ட் 6), நிர்மலா சீதாராமனுக்கு நிதானம் தேவை என்ற தலைப்பில், திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலில் தேவை நிதானம் தான். நிதியைக் கூட அப்புறமாக தேடிக்கொள்ளலாம் என்று காட்டமாக விமர்சித்துள்ளது.
முரசொலி தலையங்கத்தில், ”வலுவான நிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்ளது என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்குக் காரணமாக, ஜிஎஸ்டி வரி வசூல் சிறப்பாக இருக்கிறது என்கிறார். மக்கள் ஒழுங்காக வரி கட்டுகிறார்கள் என்றால், மக்கள் உங்களை சகித்துக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தமே தவிர, இந்திய பொருளாதாரம் சீராக இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. நீட் தேர்வை அதிகம் பேர் எழுதுகிறார்கள் என்பதற்காக, அனைவரும் நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும்,” விலைவாசி உயர்வு குறித்து கேட்டால், இறுதிச் சடங்கு நடத்துவதற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு என்கிறார் நிர்மலா சீதாராமன். தான் சொல்வதைக் கூச்சமில்லாமல் சொல்வதற்கு ஒருவர் வேண்டும் என்று நினைத்துதான் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ’உங்கள் தமிழ்நாட்டில்’ என்று சொல்லும் அளவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதானம் தவறி இருக்கிறார்.

எங்கள் தமிழ்நாட்டைப் பார்த்தால் உங்களுக்கு எதற்காக எரிகிறது? தமிழ் பேச தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல” என்பது இதன் மூலம் புரிகிறதா? நாடாளுமன்றம் என்பது விவாதக் களம். கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். யாருமே கேள்வி கேட்ககூடாது என்பதற்கு இது கோரஸ் கூடம் அல்ல” என்று முரசொலி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து தலையங்கம் வெளியிட்டுள்ளது.
–செல்வம்
சென்னையில் உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதியிடம் முதல்வர் கோரிக்கை!