நலத்திட்டமும் இலவசமும் ஒன்றல்ல: எம்.பி கனிமொழி

அரசியல்

நாடு முழுவதும் இலவசத் திட்டங்கள் தேவையா என்ற விவாதங்கள் நடந்து வரும் நிலையில், “நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும்  வித்தியாசம் உள்ளது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று திமுக எம்.பி கனிமொழி கூறியிருக்கிறார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் மாணவர் யூனியன் துவக்க விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ”இன்று மாணவ பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவிகள் முக்கியமான முடிவை எடுக்கும் இடத்தில் இருக்கிறீர்கள். உங்களது முடிவுகளில் தைரியமாக இருந்து முன்னெடுக்கும் போது அது மற்ற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வழியாக அமையும்

கல்லூரியில் மாணவ பிரதிநிதிகளாக பணியாற்றுபவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நம்மை சுற்றி நடக்கும் அனைத்திலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசுங்கள் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி ;

“பெண்களுக்கு அரசியல் தெரியும். பெண்களுக்கு அரசியல் புரியும். பெண்கள் அரசியலிலே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதுதான் தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோம். பெண்களுக்கு பாராளுமன்றத்தில் சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஒன்று இரண்டு கட்சிகளைத் தவிர எல்லோரும் ஆதரிக்கக் கூடிய மசோதாவை ஏன் இன்னும் கொண்டு வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பலமுறை பாராளுமன்றத்தில் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறேன்” என்றார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், ”எத்தனையோ நாட்கள் போராடி தான்  சட்டத்தைத் திரும்ப பெறக்கூடிய நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு கருத்துக்களை ஒன்றிய அரசு கேட்க வேண்டும்.

மக்களுடைய கருத்துக்கள் மற்றும் எதிர் கட்சியின் கருத்துக்களை செவி கொடுத்து கேட்கவில்லை என்றால் எந்த விதத்தில் ஜனநாயகமாக இருக்க முடியும்.?” என்று கேள்வி எழுப்பினார்.

இலவசங்கள் பற்றிய கேள்விக்கு கனிமொழி, “நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது அதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் இலவச மின்சாரத்தை வழங்கினார், அந்த மின்சாரம் இல்லையெனில் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு போகக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், அடிப்படை தேவை உள்ளவர்களுக்கு அரிசி இலவசமாகவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி இலவசமாகவும் கொடுப்பது அவர்களை முன்னேற்றுவதற்காகத் தான்” என்றார் கனிமொழி.

மேலும், “அரசு என்பதே மக்களுக்கானது தான் கார்ப்பரேட்டுக்கு அல்ல என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்” என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

கலை.ரா

இலவசத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் திமுகவின் நிலை என்ன?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.