திமுக கூட்டணியில் பதவி எங்களுக்கு முக்கியமல்ல: தமிமுன் அன்சாரி

Published On:

| By indhu

manithaneya jananayaka katchi supports DMK alliance

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இன்று (மார்ச் 19) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, விசிக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் தற்போது புதிதாக திமுக கூட்டணியில் இணைந்தது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் நேற்றைய தினம் (மார்ச் 19) இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, திமுகவை பொருத்தவரை 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. காங்கிரஸுக்கு 10 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத்தவிர கொங்குமக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கூட்டணி குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி,

“இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழுவிலே முடிவு செய்து, அதனடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களது ஆதரவைத் தெரிவித்தோம்.

இந்தியாவின் ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்தின் மாண்புகள், சமூக நல்லிணக்கம் இவையெல்லாம் காப்பாற்றப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது. இப்போது எங்களுடைய நோக்கம் பதவியல்ல.

அதன்படியே, தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இந்த தேர்தலை மனிதநேய ஜனநாயக கட்சி வெறும் அரசியல் களமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக, ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையேயான போராட்டமாக இத்தேர்தலை பார்க்கிறது. அதன் அடிப்படையிலேயே, இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel