சொத்து குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 7) காலை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆளுங்கட்சி அமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும் செய்திக்கு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கில்,
அடுத்தடுத்து அரசு நிகழ்ச்சிகளை திட்டமிட்டதாக வேலூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தற்போது, இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று (நவம்பர் 7) காலையில் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியுடன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விழுப்புரத்தில் இருந்து இன்று காலை மனைவியோடு புறப்பட்ட அமைச்சர் பொன்முடி வேலூர் மாவட்ட ஆட்சியர் பங்களா அருகில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
அவரை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். பின்பு காவல்துறை தரப்பில் அமைச்சர் பொன்முடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பொன்முடியை வேலூர் திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட திமுக அவைத்தலைவர் முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் வரவேற்றனர்.
இந்தநிலையில், வேலூர் நீதிமன்றத்தில் பொன்முடி தனது மனைவியோடு ஆஜர் ஆனார். வழக்கு நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, அமைச்சர் பொன்முடி முத்து ரங்கம் கலை கல்லூரியிலும், 12 மணியளவில் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும் நான் முதல்வன் திட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வேலூர் மாவட்ட பத்திரிகையாளர்கள், “வேலூர் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜராவது குறித்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான்,
இன்று அடுத்தடுத்து இரண்டு அரசு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்னமா யோசிக்கிறாங்க… ” என்று தெரிவிக்கின்றனர்.
செல்வம்
மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணி 50 சதவிகிதம் மட்டுமே முடிந்துள்ளது: அன்புமணி
தொடரும் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்!