அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும், ‘ஒற்றைத் தலைமை’ பற்றிய பிரச்சினை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஜூன் 14 ஆம் தேதி நடந்த அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் பற்றி விவாதிப்பதற்குத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டே ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற விவகாரத்தை விவாதத்துக்குக் கொண்டு வந்தார்கள். அதுவும் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் எடப்பாடிதான் அதிமுகவின் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்று கூற ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில்தான் ஓபிஎஸ் சே அம்மா அடையாளம் காட்டிய தலைமை என்று சென்னை முழுதும் தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர்க்ள் ஒட்டப்பட்டன. மாசெக்கள் கூட்டம் நடந்து முடிந்த அன்றே முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார்கள். அப்போது, ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் முதல் கிளைச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரை நடந்து முடிந்துள்ளது. அதற்கான ஒப்புதல் வாங்குவதற்காகத்தான் இந்த பொதுக்குழுவே கூடுகிறது. அப்படி இருக்க ஐந்தாண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்த பதவிகளை நீக்கி, எப்படி ஒரே தலைமையாக கொண்டுவர முடியும்? நடந்து முடிந்த கட்சித் தேர்தலுக்கு ஒப்புதல் வாங்குவதுதான் பொதுக்குழுவின் வேலை. மற்ற திட்டங்களுக்கெல்லாம் வேலையே இல்லை’ என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், டிசம்பர் 1 2021 அன்று நடந்த அதிமுஇக செயற்குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்வார்கள். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு மாற்றாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இறுதி முடிவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரே உறுதிப்படுத்துவர். சட்டவிதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தொடருகிறது. அதேசமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் புதிய தேர்வுமுறையை மாற்ற பொதுக்குழுவிற்கு அதிகாரமில்லை’ என்று அதிமுகவின் செயற்குழு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. எனவே புதிய தேர்வு முறையை மாற்ற பொதுக்குழுவுக்கே அதிகாரம் இல்லை என்பது பற்றியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விவாதித்துள்ளனர்.
நேற்று எடப்பாடியை சந்தித்த காமராஜ், உதயகுமார், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் தரப்பில் விவாதிக்கப்பட்ட இந்த கருத்தையே எடப்பாடியிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அதிமுக செயற்குழுவின் சிறப்புத் தீர்மானத்துக்கு எதிராக எடப்பாடி சென்றால் அதையே பெரும் பிரச்சினையாக்க ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
–ஆரா