அரசு மேல்நிலைப்பள்ளியின் பெண் ஆசிரியருக்கு எந்தவிதமான விளக்கமும் கேட்காமல், நேரடியாக பள்ளிக்குச் சென்று சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்த மாவட்ட கல்வித்துறையின் பெண் அதிகாரியால் தற்போது திமுக ஆட்சி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
சுந்தரேசன்-பிரேமாதேவி தம்பதியர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகன். மொத்தம் மூன்று பிள்ளைகளில் மூத்தவர் உமா மகேஸ்வரி.
இவர் 2001இல் அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு முதன்முதலில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியைத் தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து வெவ்வேறு மாவட்டங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடைசியில் குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
எத்தனை மாவட்டம் எத்தனை பள்ளிக்கு இடமாற்றம் செய்தாலும் தனது கல்வித் துறையைச் சார்ந்த விடயங்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் வெளிகளில் பதிவிட்டு வந்தவர், எட்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
உமா மகேஸ்வரிக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து வந்தது. கூடுதலாக செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியிலும் இடம்பெற்று வந்தார்.
இதன்காரணமாக மற்ற உயர் அதிகாரிகளுக்கு பொறாமையும் எரிச்சலும் ஏற்பட்டு உமா மகேஸ்வரியை எதிரியாக பார்த்து வந்தனர்.
மேலும் அவர் எழுதிய, ’கல்வி சிக்கல்கள் தீர்வை நோக்கி’, ’இன்றைய சூழலில் கல்வி’, ’நம் கல்வி எது?’, ’தமிழக கல்விச் சூழல்’, ’வயிரமுடைய நெஞ்சு வேணும்!’ ’உரையாடும் வகுப்பறைகள்’, ’தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை!’ ’வஞ்சிக்கப்படும் பொதுக் கல்வி’ என எட்டு புத்தகங்களும் கல்வித்துறை அதிகாரிகளை அதிரவைத்துள்ளதாக கல்வித்துறையின் முக்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் மார்ச் 7 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரி கற்பகம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று உமா மகேஸ்வரியிடமே அவரது சஸ்பெண்ட் ஆர்டரை நேரில் கொடுத்து உடனடியாக பள்ளியை விட்டு வெளியில் போகச் சொல்லியுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்குக் காரணம் அரசு ஊழியராக இருந்துகொண்டு கல்வித்துறையைப் பற்றி சோசியல் மீடியாவில் பதிவு செய்வது தவறு என்று கூறியிருக்கிறார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டது பற்றி ஆசிரியர் உமா மகேஸ்வரியை தொடர்புக்கொண்டு கேட்டோம். மீடியா மற்றும் யாரிடமும் பேசக்கூடாது, சோசியல் மீடியாவில் பதிவு செய்யக்கூடாது என்று தடை போட்டுள்ளனர் அதிகாரிகள். அதனால் இப்போது நான் எதுவும் பேச முடியாது என்று லைனை துண்டித்தார்.
சோசியல் மீடியாவில் கல்வி சார்ந்த விடயங்களை பதிவிட்டதால் ஆசிரியர் உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்தது பற்றி எழுத்தாளர் ஜெயபாஸ்கரிடம் கேட்டோம்.
”இது ஒரு மோசமான செயல். எழுத்துரிமையைப் பறிக்கும் செயல். உமா மகேஸ்வரி அவர் சார்ந்த கல்வித் துறையைப் பற்றி எழுதுகிறார், பதிவிடுகிறார். அவர் என்ன பொதுத்துறையைப் பற்றியும், நாட்டு பொருளாதாரத்தைப் பற்றியுமா எழுதிவிட்டார்?
அவரது எழுத்துக்கள், புத்தகங்கள் கல்வியைச் சார்ந்து மாணவர்களின் நலனுக்காக உள்ளது. அப்படிப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்திருப்பது திறமையற்ற நிர்வாகத்தைக் காட்டுகிறது.
அரசு ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களான கிராம உதவியாளர் முதல் தலைமை செயலாளர் வரையில் பொதுவெளியில் பதிவு செய்கிறார்கள், புத்தகம் எழுதுகிறார்கள். அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து விடுவார்களா? இது ஒரு விஷமத்தனமான செயல்” என்று கடுமையாக எச்சரித்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாகளிலும் இவரது சஸ்பெண்ட் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
சஸ்பெண்ட் செய்தது பற்றி சி.இ.ஓ கற்பகத்தை தொடர்பு கொள்ள பலமுறை கால் செய்தோம். ரிங் போய் கட்டானது. பதில் சொல்லாமல் போனைத் தவிர்த்தார். சி.இ.ஓ-வின் நேர்முக உதவியாளர் உதயகுமாரை தொடர்புகொண்டு உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் ஆர்டர் பற்றி கேட்டால், ”மேடம் மீட்டிங்கில் இருக்கிறார்” என்று லைனை துண்டித்தார்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகளைக் கேட்டால், கல்வித்துறை கலெக்சன் துறையாக மாறிவருகிறது என்கிறார்கள். ஆசிரியர் சஸ்பெண்ட் ஆர்டர் பற்றி கேட்டதற்கு போராட்டங்கள் வேண்டாம் விரைவில் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறோம் என உறுதி கொடுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.
இவ்வளவு சர்ச்சைகளை உருவாக்கியுள்ள பெண் ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம் அமைச்சர் அன்பில் மகேசுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஜாபர் சாதிக் தொடர்புடைய யாரையும் விடக்கூடாது” : அண்ணாமலை
பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி உறுதியானது..பரபரப்பைக் கிளப்பும் ஆந்திர அரசியல்!
எலக்ஷன் ஃப்ளாஷ் : தெலுங்கு ஓட்டுகளைக் குறிவைக்கும் விடுதலைக் களம்!