ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், ராஜா துரைசிங்கம் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று (ஜூலை 19) தொடங்கி வைத்தார். அதுபோன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்காக அமைச்சர் வருவதற்கு முன்னதாக இளைஞர்கள் விழா அரங்குக்குள் விரைவாகவே அழைத்து வந்து அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியினை அமைச்சர் பெரிய கருப்பன் காலை 9.45 மணிக்கு தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெகுநேரமாகியும் வராததால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இளைஞர்கள் ஒரே அறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில் காலை 11 மணிக்கு மேல், இளைஞர் திறன் திருவிழா நடக்கும் இடத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் காரில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம், 3 மணி நேரம் எங்கையா காத்திருந்த ? யாருயா பேட்டி கொடுத்தது ? என மிரட்டும் தொனியில் பேசினார்.
அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை மிரட்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தன்னிடம் மனு கொடுக்க வந்த கலாவதி என்ற பெண்மணியை தலையில் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அந்த பெண் எனக்கு அமைச்சர் அண்ணன் போல என்று விளக்கமளித்தார்.
இதனால் அந்த விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மற்றொரு அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
க.சீனிவாசன்
Comments are closed.