குஜராத் கூட்டுப் பாலியல் வன்முறை: அனைவரும் விடுதலை! வலுக்கும் கண்டனம்!

Published On:

| By Kalai

குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளான கர்ப்பிணி பல்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டு இருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு  குஜராத்தில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் நடந்த கலவரத்தின் போது பல்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேரும், 3 குழந்தைகளும் அவர் கண் முன்னே கொலை செய்யபட்டனர்.. பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பில்கிஸ் பானு அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்று உயிர் பிழைத்தார். காவல்துறையினர் பல்கிசை அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தும், அவர் பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை என்று மருத்துவர்களும் தெரிவித்த நிலையிலும் பல்கிஸ் பானு தொடர்ந்து போராடினார்.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு, பில்கிஸ் பானுவின் வழக்கு மராட்டிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டு புகாருக்குள்ளான 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம். 15 வருடங்களாக சிறையில் கழித்த குற்றவாளிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்து கருத்தில் கொள்ளுமாறு குஜராத் அரசை சுப்ரீம்கோர்ட் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து குழு ஒன்று அமைக்கப்பட்டது.  குழுவின் பரிந்துரையின் பேரில் தற்போது குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை தலைகுனிய வைத்த சம்பவம்!

இதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ விடுதலைப் பெற்ற இந்தியாவில் நடைபெற்ற படுகொலைகளில் மிக மோசமான கலவரம் கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரமாகும்.

அதிலும் குறிப்பாக 5 மாத கர்ப்பிணியாக இருந்த பல்கிஸ் பானு என்ற பெண்மணியை கலவரக்காரர்கள் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை படுகொலை செய்தது உலகின் பார்வையில் இந்தியாவை தலைக்குனிய வைத்தது. இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது மும்பை உயர்நீதிமன்றம்.

பெண்களின் கண்ணியக் காக்கப்பட வேண்டும்: மோடி

தற்போது ஆயுள் சிறையில் இருந்த 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. நேற்று டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பெண்களை அவமானப்படுத்தக்கூடாது எனவும், பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி பேசி ஒரு நாள்கூட முடியாத நிலையில் இந்த 11 குற்றவாளிகளை விடுத்துள்ளதும் அதற்கு பெண்களின் கண்ணியத்தையும், உரிமையையும் பாதுகாக்கப்படவேண்டும் என்று சொல்லிக்கொண்டே ஒன்றிய பாஜக அரசு உடன்பட்டிருப்பதும் கவலைக்குரியது.

பல்கிஸ் வழக்கை விடக் கொடுமையில் குறைவான குற்றத்தைச் செய்த ஏராளமான குற்றவாளிகள் எந்தவித நிவாரணமும் இன்றி தொடர்ந்து குஜராத் சிறைகளில் வாடும் நிலையில், குஜராத் அரசு இந்த 11 பேரையும் விடுவித்துள்ளது உள்நோக்கம் கொண்டது.

தமிழ்நாட்டிலும் விடுவிக்கலாமல்லவா?

நாடே தலைகுனிந்த மிகமோசமான இந்த பல்கிஸ் பானு பாலியல் வன்கொடுமையில் தண்டனை பெற்றவர்களையே குஜராத் அரசு விடுவித்துள்ளபோது, தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 6 தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்யவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share