குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? மத்திய அரசு விளக்கம்!

அரசியல்

குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாடுகளை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் நெருக்கடிக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், லட்சக்கணக்கானோரை காவு வாங்கியது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வருகிற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சுகாதார நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஜூலை 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இவரைத் தவிர, கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஜூலை 27 ஆம் தேதி கேரளா திரும்பிய 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குரங்கு அம்மை தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று ( ஆகஸ்ட் 3 ) வெளியிட்டுள்ளது.

அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது ;

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

இரு கைகளையும் அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள், பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்த்து துவைத்தல் கூடாது.

குரங்கு அம்மை அறிகுறி இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எடப்பாடி டெண்டர் வழக்கு: என்ன சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

1 thought on “குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? மத்திய அரசு விளக்கம்!

  1. இந்த மாதிரி பாதுகாப்பெல்லாம் வேஸ்ட்., சாயங்கால நேரத்துல வீட்டு வாசல்ல விளக்கேத்தி வச்சு, தட்டு, தாம்பாளத்துல கடகடகடனு தட்டுனா எல்லாம் சரியாயிரும்…

Leave a Reply

Your email address will not be published.