குடியரசுத் தலைவர் தேர்தல் : 99.18 % வாக்குப்பதிவு!

அரசியல்

நாடு முழுவதும் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி.மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதி நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று ( ஜூலை 18 ) நடைபெற்றது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க்களும் வாக்களித்தனர். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காகச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 4 முதல் 5 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாசர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 21ஆம் தேதி காலை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர். மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். வருகிற 25ஆம் தேதி அவர் பதவி ஏற்பார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
1
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
1

1 thought on “குடியரசுத் தலைவர் தேர்தல் : 99.18 % வாக்குப்பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *