கலைஞர் கேட்டு திருமாவளவன் நிறைவேற்றாத கோரிக்கை ஒன்றை அவரது மணிவிழா கொண்டாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பியின் 60-வது பிறந்த நாள், சென்னை கலைவாணர் அரங்கத்தில் மணிவிழாவாக இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார். அப்போது திருமாவளவன் குறித்து பல சுவாரசியமான தகவல்களை குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், ”திருமாவளவன் 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஆனால் அவர் இப்போதும் 20 வயது இளைஞனாகவே சுறுசுறுப்பாகவே இயங்கி கொண்டிருக்கிறார். திருமாளவனுக்கு 2012ம் ஆண்டு நடந்த 50வது பிறந்தநாளில் முத்தமிழறிஞர் கலைஞர் வந்து வாழ்த்தினார். 60 வது பிறந்தநாளில் நான் வந்து வாழ்த்துகிறேன்.
திருமாவளவன் நிறைவேற்றாத கோரிக்கை!
கலைஞரும் நானும் எப்போதும் திருமாவளவனுக்கு தோளோடு தோளாக நிற்போம். எங்களுக்கு இடையேயான கொள்கை உறவு, தேர்தலுக்கானது மட்டுமல்ல. அதன்பின்னும் இன்னும் ஆழமாக தொடர்ந்து வருகிறது. இன்றைக்கு இருப்பது போல 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால், அவருக்கு அப்போதே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது. கலைஞரை சந்திக்க எப்போது திருமாவளவன் வந்தாலும், அவரிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கோரிக்கை வைப்பார். திருமாவும் தலையாட்டுவார். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. கலைஞர் கேட்டு திருமாவளவன் நிறைவேற்றாத கோரிக்கை ஒன்று உண்டென்றால் அது அவரது திருமணம் தான்.
ஆனால் அவர் விடுதலை சிறுத்தை கட்சியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அரங்கு மட்டுமல்ல, ஊரெங்கிலும் இருக்கிற கட்சியின் தொண்டர்கள் தான் அவரது பிள்ளைகள்.” என்றார் அரங்கம் அதிர.
கிறிஸ்டோபர் ஜெமா