கம்யூனிஸ்டுகளின் கோட்டையில் புகுந்த கவர்னர்:  காங்கிரஸ் ஆபீசில் புகுந்த போலீஸ்- நாகையில் நடந்தது என்ன?

Published On:

| By Aara

தொடர்ந்து சர்ச்சைக்குரிய விவாதங்களின் மையப் பொருளாகி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் 28 ஆம் தேதி நாகப்பட்டினம் பயணமும்  சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.

ஜனவரி 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று ஆளுநர் ரவி நாகப்பட்டினத்துக்கு வருகை தருவதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.  ஆளுநர் வந்தாலே கருப்புக் கொடி காட்டுவோம் என்று வழக்கமாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் தயாரானார்கள். கூடவே ஆளுநர் ஆர்.என்.ரவி கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணி கிராமத்துக்கு செல்வார்  என்ற தகவலை அடுத்து கம்யூனிஸ்டு கட்சியினர்  கூடுதல் டென்ஷன் ஆனார்கள்.

1968  ஆம் ஆண்டு அப்போதைய கீழத் தஞ்சை மாவட்டத்தில் (இப்போது நாகப்பட்டினம் மாவட்டம்)  விவசாயத் தொழிலாளர் 44 பேரை  நிலக்கிழார்கள் ஒரே குடிசையில் அடைத்துக் கொளுத்திக் கொன்றார்கள். அப்போது இந்தியா முழுவதும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளானது.  இந்த விவசாயத் தொழிலாளர்களுக்காக அப்போது போராடிய கம்யூனிஸ்டு கட்சியினர், தொடர்ந்து போராடினார்கள்.  அந்த கொடூர கொலையின் போது தப்பிப்  பிழைத்த பழனிவேலு, இப்போது வயது முதிர்ந்த நிலையில் வெண்மணியில்தான் இருக்கிறார்.

அவரை சந்தித்து பேச திட்டமிட்டுத்தான் ஆளுநரின் பயணத்தில் வெண்மணி கிராமமும் சேர்க்கப்பட்டது. இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அதிர்ந்து போய் வெண்மணி கிராமத்துக்கு 27  ஆம் தேதி சென்று விசாரித்தனர். ஆளுநர் அங்கே வரப் போவதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அடுத்த கொஞ்ச நேரத்தில அந்த முதியவர் பழனிவேலு செய்தியாளர்களை சந்தித்தார்.  “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க எனக்கு  விருப்பமில்லை.  60 வருடங்களாக இந்த  பகுதியில் பல்வேறு இயக்கங்கள் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான் எங்களை பாதுகாத்து வருகிறது. பாரதிய ஜனதா  போன்ற கட்சிகள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர்.

அவர்கள் வந்து சந்திப்பதால் நாங்கள் ஒருபோதும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரப்  போவதில்லை. தேர்தல் வருவதால் இங்குள்ள மக்களின் வாக்குகளை கைப்பற்றலாம் என்ற நோக்கத்தோடு வருகிறார்களே தவிர, இங்குள்ள மக்களின் நலன்களுக்காக அவர்கள் ஒருபோதும் வரவில்லை. நாங்கள் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியோடுதான் இருப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் எங்களின் உயிர்நாடி” என்றும் கூறினார்.

ஆனால்  அடுத்த நாளே அதாவது ஜனவரி 28  ஆம் தேதி கீழவெண்மணி கிராமத்திலுள்ள  பழனிவேலுவின் வீடு தேடிச் சென்றார் ஆளுநர். பழனிவேலுவோடு கை குலுக்கி அவரோடு உரையாடினார். அதுமட்டுமல்ல, நேற்று பிற்பகல் நாகப்பட்டினம் அருகே பொரவச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பழனிவேலு ஆளுநரோடு கலந்துகொண்டார்.

சோஹோ அறக்கட்டளை  நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்ட விழாவில்  பேசும்போதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி,
“ இன்று நான் சில கிராமங்களை சந்தித்தேன். பூர்வகுடித் தமிழர்கள், மீனவர்கள் கிராமங்களை சந்தித்தேன். நான் அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு ஏழையாக  இருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.  இன்று நமது நாடு வேகமாக வளரும் பொருளாதார நாடு. நமது தமிழ்நாடு நாட்டிலேயே  மிக அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக  உள்ளது. ஆனால் இந்த கிராமங்களில் நான் கண்ட வறுமை வலியளிப்பதாக உள்ளது.

Image

நான் கீழவெண்மணி கிராமத்துக்கு சென்றேன். அங்கே தியாகி பழனிவேல் அவர்களை சந்தித்தேன். அந்த கிராமத்தின் நிலையை கண்டேன். இந்த கிராமம் 55 வருடங்களுக்கு முன்பு உலகின் கொடூரமான படுகொலையை சந்தித்தது. இப்போதும் அந்த கிராமத்தில் குடிசைகளை கண்டேன். மனது வலித்தது” என்று பேசியிருந்தார்.

நாகப்பட்டினம் அருகே ஆளுநர் பேசிய பேச்சைத்தான் இன்று காலை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்தார்.

ஆளுநரின் பேச்சு அரசியல் ரீதியான சர்ச்சையை எழுப்பிக் கொண்டிருக்கிறது என்றால்… ஆளுநர் ஆர்.என்.ரவி கம்யூனிஸ்டுகளின் கோட்டை என கருதப்படும்   கீழவெண்மணிக்குள் எப்படி  புகுந்தார் என்ற கேள்வி கம்யூனிஸ்டுகளிடையே எதிரொலிக்கிறது.

Image

இதுபற்றி கீழ்வேளூர் அரசியல் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “1968 கொடூரத்தில் தப்பித்த பழனிவேலுவின் மருமகன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருக்கிறார். அவர்தான் தனது இயக்க பிரமுகர்களிடம் சொல்லி ஆளுநரை கீழ வெண்மணிக்கு அழைத்து வரலாம். என் மாமாவை பார்க்க வைக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் கம்யூனிஸ்டு இயக்கத்திலே சலசலப்பை ஏற்படுத்தலாம், ஏற்கனவே டெல்டாவில் கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக  பல்வேறு கட்சிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை பாஜகவுக்கு வரவைக்கலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். போட்டுக் கொடுத்த பயணத் திட்டத்தில்தான் ஆர்.என்.ரவி பயணித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில்தான் முதல் நாள், கம்யூனிஸ்டு கட்சியே என் உயிர் நாடி என்று சொன்ன பழனிவேலு அடுத்த நாள் ஆளுநரின் நிகழ்வில் மேடையில் அமர்ந்திருந்தார். ஆர்.எஸ்.எஸ்.தான் ஆளுநரின் பயணத் திட்டங்களை வகுத்து அதன் மூலம் பாஜகவுக்கு அரசியல் அறுவடை செய்ய முயற்சிக்கிறது”  என்கிறார்கள்.

3 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இதற்கிடையே நாகப்பட்டினம் வந்த  ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள், திகவினர் இணைந்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினார்கள். ஆளுநர் கீழவெண்மணி கிராமத்துக்கு வருவதற்கு சற்று முன்னதாக கீழ்வெண்மணி ஆர்ச்சுக்கு  முன்பாக திரண்ட கட்சியினர்  ஆளுநருக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டு நிர்வாகிகளோடு  இணைந்து ஒருங்கிணைத்தார்.

ஆளுநர் வருகைக்கு எதிரான போராட்டத்துக்கு வழக்கம்போல நாகை  போலீஸார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.  இதுகுறித்து நம்மிடம் பேசிய நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஆர்.என்.அமிர்தராஜா,

3 பேர் மற்றும் கூட்டம் இன் படமாக இருக்கக்கூடும்

“ஆர்.எஸ்.எஸ்,.சின் ஏஜெண்ட் ஆகவும், பாஜகவின் செயல் தலைவராகவும் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாகைக்கு வருவதை மக்களோடு சேர்ந்து  காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையான போராட்டம் நடத்தினர்.  காவல்துறை எங்களை  கைது செய்தது. அதுமட்டுமல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல காங்கிரஸ் தோழர்களை கைது செய்தனர்.

இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் தமிழரசன், கீழ்வேளூர் வட்டார காங்கிரஸ் தலைவர் லியோ, நகர காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவர்தன்  உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமல்ல… கீழ்வேளூர் வட்டார காங்கிரஸ் அலுவலகத்திலே வைக்கப்பட்டிருந்த  500 கருப்புக் கொடிகள், மற்றும் கருப்பு பலூன்களை  அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்து போலீசார் கைப்பற்றிச் சென்றிருக்கிறார்கள்.

காவல்துறையினர் இப்படி நடந்துகொள்வது ஜனநாயகத்துக்கு விரோதமாக இருக்கிறது. அறவழியில் நாங்கள் போராட்டம் செய்கிறோம். ஆனால் எங்கள் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைவது எப்படி சரியாகும்?  இதை நாங்கள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கவனத்துக்கும் எடுத்துச் சென்றிருக்கிறோம். ஆளுநர் இங்கே எப்போது வந்தாலும் காவல்துறை எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார் அமிர்தராஜா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்

இனி சில்லறைக்காக சண்டை வேணாம்… டவுன் பஸ்களில் யுபிஐ டிக்கெட்!

உயர்கல்வியில் மறுக்கப்படும் இட ஒதுக்கீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment