ஏக்நாத் ஷிண்டேவை நம்பியது என் தவறுதான்… மனம் திறந்த உத்தவ் தாக்கரே

அரசியல்

எனது ஆட்சி கவிழ்ந்தது குறித்தோ, எனது முதலமைச்சர் பதவி பறிபோனது குறித்தோ பெரிய வருத்தங்கள் இல்லை. ஆனால் நான் நம்பியவர்களே துரோகிகளாக மாறி நான் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும்போது எனது ஆட்சியை கவிழ்த்துள்ளனர் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்  உத்தவ் தாக்கரே மனம் திறந்து பேசியுள்ளார்.

தனது தந்தை பால் தாக்கரேவால் நிறுவப்பட்ட கட்சியின் மீதான தனது கட்டுப்பாட்டை பறிக்க ஏக்நாத் ஷிண்டே அணியினர் முயற்சிக்கிறார்கள். ஆனால் சிவசேனா நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வெல்லும் எனறு கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் எனக்கு துரோகம் செய்து கட்சியை உடைத்துள்ளனர். வேண்டுமானால் அவர்கள் அவர்களின் தந்தையின் படங்களை பயன்படுத்தி வாக்கு கேட்கட்டும். சிவசேனாவை உருவாக்கிய எனது தந்தையின் படங்களை பயன்படுத்தி வாக்குபிச்சை கேட்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். நான் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும்போது சிலர் என் உடல்நிலை பூரண குணமடைய வேண்டினார்கள், சிலர் குணமடைய கூடாது என நினைத்தார்கள். அவர்கள் எனக்கு எதிராக தொடர் சதிகளையும் செய்தனர்.

ஏக்நாத் ஷிண்டே கட்சியை காப்பார் என நினைத்து அவருக்கு நம்பர் 2 அந்தஸ்தையும் கொடுத்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கையையும் உடைத்துவிட்டார்.

பால்தாக்கரேவின் மரணத்திற்குப் பிறகும் சிவசேனாவின் வெற்றிகரமான வளர்ச்சியும், கட்டுகோப்பாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தாக்கரே குடும்பத்திடமிருந்து சிவசேனாவை பிரிக்க விரும்புகிறார்கள். மற்ற கட்சி தலைவர்களை பாஜக அபகரித்து கொள்ள எப்போதும் முயற்சி செய்யும். அதுபோலத்தான் இப்போதும் செய்கிறது.

அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னையும் கட்சியையும் பிரிக்க முயற்சி செய்யட்டும். இப்போது எனது பெற்றோர் இல்லை. ஆனால் ஏக்நாத் ஷிண்டே அணியினர் அவர்களது பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெற்று பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்கட்டும். எனது தந்தையின் மதிப்பை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? அவர்களுக்கு கடமையுணர்வோ, அர்ப்பணிப்போ, தைரியமோ இல்லை. அவர்கள் துரோகிகள்” என காட்டமாக பேசியுள்ளார்..

மேலும் அவர், “சில சிவசேனா தொண்டர்களின் மீதும் தலைவர்களின் மீதும் அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்திருந்தேன். நீண்ட காலமாக அவர்களை நம்பியிருந்ததும் என் தவறு தான்” எனவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, சிவசேனாவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து தனக்கு பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்ரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சீனிவாசன்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *