அரை நூற்றாண்டுக்கும் மேலாக ராணுவத்தில் இருக்கும் மிக் 21 ரக போர் விமானங்களை கைவிட இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீன போர் மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல் காரணமாக ராணுவத்தை வலுப்படுத்த இந்தியா முடிவு செய்தது. அதன்படி ரஷ்யாவிடம் இருந்து 1963ம் ஆண்டு முதல் ஒற்றை என்ஜின் மிக் 21 ரக விமானத்தை இந்தியா வாங்கியது.

விபத்தில் சிக்கும் மிக் 21 விமானங்கள்!
அதுமுதல் 1200க்கும் மேற்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள் வாங்கப்பட்டு இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு மக்களவையில் பேசிய அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய 872 மிக் 21 விமானங்கள் விபத்தில் சிக்குவதால் விமானிகள், பொதுமக்கள் உட்பட 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார். தொடர்ந்து 2019ம் ஆண்டு தகவலின்படி, இந்தியாவில் 1200 மிக் ரக விமானங்கள் படையில் இருந்த நிலையில் அவற்றில் பல விபத்துகளில் தொடர்ந்து சிக்கியுள்ளன. தற்போது 70 மிக்-21 ரக விமானங்களையும், 50 மிக்-29 ரக விமானங்களையும் இந்திய விமானப்படை கொண்டுள்ளது.
கடந்த 20 மாதங்களில் மட்டும் மிக் 21 ரக போர் விமானம் 6 முறை விபத்தில் சிக்கியுள்ளது. இதன்மூலம் இந்திய விமானப்படை அதன் அனுபவம் வாய்ந்த 6 விமானிகளை இழந்துவிட்டது. 3 நாட்களுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மிக் 21 பைசன் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மிக் 21 ரக போர் விமானம் கைவிட முடிவு!
இதனால் ‘பறக்கும் சவப்பெட்டி’ மற்றும் ‘விதவை மேக்கர்’ போன்ற அவப்பெயருடன் தொடர்ந்து இயங்கி வரும் மிக் 21 ரக போர் விமானங்களை கைவிட கோரிக்கை வலுத்துள்ளது. அதன்படி ஸ்ரீநகர் விமான படை தளத்தில் உள்ள மிக் 21 பைசன் போர் விமானத்திற்கு ஓய்வளிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டுக்குள் மிக்21 ரக போர் விமானங்களுக்கு முழுமையாக தடைவிதிக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
மிக் 21 ரக விமானத்திற்கு பதிலாக தேஜாஸ் போன்ற இலகு ரக மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களை தற்போது இந்திய விமானப்படையில் அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா