பிரதமர் நரேந்திர மோடியின் “ஹர் கர் திரங்கா” பிரச்சாரத்திற்காகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரத்தை, அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளனர்.
விளம்பரத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு, புரட்சியாளர் சாவர்க்கர் என்ற தலைப்பில் ஆர் எஸ் எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக்) விநாயக் சாவர்க்கர் படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிடப்பட்டது . இதோடு பிரிவினைக்கு நேரு மற்றும் பாகிஸ்தான் தந்தை முகமது அலி ஜின்னாவே பொறுப்பேற்க வேண்டும் என கர்நாடக பாஜக ட்வீட் செய்த வீடியோவால் சமூக ஊடகங்களில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் ,நேருவால் தான் இந்தியா பாகிஸ்தான் என பிரிந்துள்ளது. அதனால்தான் அவரது புகைப்படம் நாளிதழில் இடம் பெறவில்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.
“சர்தார் வல்லபாய் படேல், நமது சுதந்திரத்திற்காக போராடினார், அதனால் அவரது புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. ஜான்சி ராணி, காந்தி மற்றும் சாவர்க்கரும் அப்படித்தான்.
நேரு நாட்டின் முதல் பிரதமர். அவர் நமது சுதந்திரத்திற்காகப் போராடினார், ஆனால் அவர் நம் நாட்டைப் பிரித்தார்” என்றார்.
நேருவின் படம் இடம் பெறாதது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில் “இது இந்திய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு அவமானம்.பிரதமர் மோடி பசவராஜ் பொம்மையை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
“நேருவை இத்தகைய அற்பத்தனங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் கர்நாடக முதல்வர், அவர் செய்தது அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை மற்றும் அவரது தந்தையின் முதல் அரசியல் குரு எம்.என். ராய் ஆகியோரை அவமதிப்பது ஆகும். இது பரிதாபத்திற்குரியது” என்று ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.
“கர்நாடக பிஜேபி அரசு தனது சுதந்திர தின விளம்பரத்தில் இந்தியாவின் முதல் பிரதமரான நேருவை வேண்டுமென்றே தவிர்க்கலாம், ஆனால் அவர்களால் வரலாற்றை அழிக்கவோ அல்லது வரலாற்றை மீண்டும் எழுதவோ முடியாது. நவீன, சோசலிச, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு இந்தியாவை உருவாக்கியவர் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எப்போதும் நினைவில் இருப்பார்” என்று டாக்டர் சையத் நசீர் ஹுசைன், எம்.பி. ட்வீட் செய்துள்ளார்.
ஆங்கிலேயர்கள் ஒழிந்தவுடன் அடிமைத்தனம் முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைத்தபோது, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ் க்கு இன்னும் அடிமையாக இருப்பதைக் காட்டி அனைவரையும் தவறாக நிரூபித்துள்ளார்.
இன்றைய அரசு விளம்பரத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்காதது, ஒரு முதல்வர் தனது நாற்காலியைக் காப்பாற்ற எவ்வளவு கீழ்த்தரமாகச் செல்கிறார் என்பதைக் காட்டுகிறது” என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், கரூர் காங்கிரஸ் எம்பி..ஜோதிமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அன்புள்ள மோடி அவர்களே, உங்கள் அற்பத்தனத்தால் நேருவை மறைக்க முடியாது, வரலாறு அவரை எப்போதும் நினைவில் வைத்து இருக்கும் , ஆனால் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து உங்களால் ஒரு சுதந்திர போராட்ட வீரரையும் உங்களால் காட்ட முடியாது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: மதுரை சம்பவம்- ஸ்டாலின் ரியாக்ஷன் தாமதம்- திமுகவில் என்ன நடக்கிறது?