ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூடிய தினத்தில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலையடுத்து, சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வரும் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜூலை 14) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சதீஷ்குமார், “சண்டை போட வேண்டுமென்றால் கால் பந்து மைதானத்தை வாடகைக்கு எடுத்து அங்கே போய் சண்டை போட வேண்டியதுதானே…ஏன் மக்கள் நடமாடும் தெருக்களில் போடுகிறார்கள்?” என்று கண்டித்ததோடு, இதுகுறித்து தமிழக காவல்துறை இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று (ஜூலை 15) பிற்பகல் தொடங்கியது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் காவல் துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையையும், வீடியோ காட்சிகளையும் சில நிமிடங்கள் செலவிட்டு நீதிபதி உன்னிப்பாக பார்த்தார்.
வீடியோ ஆதாரங்களைப் பார்த்த நீதிபதி சதீஷ்குமார், ”தொலைக்காட்சிகளில் பார்த்ததில் 10 சதவீதம்கூட காவல் துறை தாக்கல் செய்த வீடியோவில் இல்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து காவல் துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது. அதில், “போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

அதற்கு, “வன்முறை சம்பவத்துக்குப் பின் தடியடி தொடங்கிய பிறகுதான் வீடியோ பதிவு செய்யப்பட்டது” என காவல்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தொடர்ந்து, “தலைமை அலுவலகம் இருதரப்பில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை. இந்த வழக்கு யாரிடம் சாவியை ஒப்படைப்பது என்பது தொடர்பாக இல்லை. சீல் வைத்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியையோ சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இருதரப்பிலும் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொது அமைதி, மக்கள், பள்ளிக் குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதுகிறோம். சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால், மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம். இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வன்முறையால் 25 லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு ஏற்பட்டிருக்கிறது” என காவல் துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது. அத்துடன், 15 பேர் கைது தொடர்பான ரிமாண்ட் அறிக்கையையும் காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.
இதற்கு நீதிபதி, “தலைமை அலுவலக வன்முறையால் பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், “காவல் துறை வழங்கியிருக்கும் மனுவுக்கு, ஆட்சேபம் தெரிவித்து பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். கட்சியில் இருக்கக்கூடிய இந்தப் பதவி விவகாரம் என்பது கட்சி அலுவலக உரிமை விவகாரம் தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது. பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்று சொல்வதன் மூலம், அனைவரும் அவர் பக்கம் இருப்பதாக கருத முடியாது. கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ. பார்க்க வேண்டுமே தவிர, யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இதனால் இரு தரப்பும் இடையிலான சர்ச்சையை நீதிமன்றம் மட்டுமே தீர்க்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, “என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது. அந்தக் கட்சி அலுவலகம் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமானதாக இருந்தால், அவர் ஏன், கட்சி அலுவலகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்? கோப்புகளை தூக்கி வெளியே போட வேண்டும்?” என்று கேள்விகளை முன் வைத்தது.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, “பொதுக்குழு நடக்கும்போது கட்சி அலுவலகத்தை பூட்டிவைக்கும் பழக்கம் கிடையாது. மாநிலம் முழுவதில் இருந்தும் கட்சியினர் வருவார்கள். அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றபோதுதான் அங்கிருந்த 4 மாவட்டச் செயலாளர்கள் அவரை உள்ளே விடாமல் தடுத்தனர். ஜூலை 11 பொதுக்குழு நடைபெற்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்று வாதத்தை வைத்தனர்.
தொடர்ந்து காவல் துறை அறிக்கை தொடர்பாக இருதரப்பையும் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
–ஜெ.பிரகாஷ்